ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது ஐபோன் 14 உற்பத்தியினை இந்தியாவில் விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஐபோன் 14, சீனாவிலேயே உற்பத்தி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தற்போது சீனாவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேச சமயம் சீனாவில் உற்பத்தியினை நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் ஷாக்..!

சீனாவுக்கு போட்டி
உலகின் உற்பத்தி மையாக திகழ்ந்து வரும் சீனாவில் உற்பத்தி இருந்தாலும், இந்தியாவில் தொடங்கப்படுவது, சீனாவுக்கு போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தனது பெரும்பாலான போன்களை தயாரித்து வந்த உற்பத்தியாளர், தற்போது இந்தியாவுக்கு மாற திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் தனது உற்பத்தியினை செய்து வந்தாலும், சீனாவில் தொடங்கப்பட்ட ஒன்று என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?
சீனாவில் தற்போது பல சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக தாய்வான் – சீனா இடையேயான பிரச்சனை நிலவி வருவது, இதன் காரணமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் என பல காரணிகளுக்கு மத்தியில், இந்த மாற்றமானது இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியில் தாக்கம்
மேலும் சீனாவில் விதிக்கப்பட்டஜீரோ கோவிட் கட்டுப்பாடு காரணமாக, அங்கு பொருளாதாரத்திலும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. அதோடு தற்போது கடுமையான மின்வெட்டும் இருந்து வருகின்றது. இது தொழிற்சாலைகளில் உற்பத்தியினை பாதித்துள்ளது. இதனால் ஆப்பிள் உள்ளிட்ட பல ஆலைகளும் உற்பத்தியில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

சென்னையில் உற்பத்தியா?
சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சப்ளை சங்கிலியிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த உற்பத்திக்கு தேவையான பொருட்களை தென் இந்திய நகரமான சென்னையில் உள்ள ஐபோன் ஆலைக்கு அனுப்படலாம் என்றும், இதன் மூலம் சென்னையில் அசெம்பிளிங் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை.

தீபாவளி தான் இலக்கா?
ஆப்பிளின் உற்பத்தியானது இந்தியாவிலும் சீனாவிலும் ஒரே நேரத்தில் ஒரே மாடலை தொடங்குவது யதார்த்தமான விஷயம் அல்ல. எனினும் செப்டம்பர் மாத பிற்பாதியில் உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி சந்தையினை இலக்காக வைத்து இது தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு காரணம்
சீனாவின் இடைவெளியினை இந்தியா நிரப்பலாம் என்றும், இந்தியாவில் இது முக்கிய மைக்கல்லாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் கூட்டாளர்கள் 2017ல் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியினை உருவாக்கத் தொடங்கினர். ஆப்பிளுக்கு இந்தியா 1.4 பில்லியன் மக்கள் அடங்கிய மிகப்பெரிய சந்தை. அது மட்டும் அல்ல, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சில சலுகைகளையும் அளித்து வருகின்றது. ஆக இதுவும் உற்பத்தியாளர்களை இந்தியாவுக்கு வர ஆர்வத்தினை தூண்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Apple plans to manufacture iPhone 14 in India
Apple plans to manufacture iPhone 14 in India/இந்தியாவால் கை நழுவி போகும் வாய்ப்பு.. இந்தியாவிலும் உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டம்.. ஏன் தெரியுமா?