நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு சின்ன சந்து கிராம பகுதியில் பழனிவேல் என்பவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருக்கிறார். இவர் நகராட்சி துவக்கப் பள்ளியின் மேலாண்மை குழு தலைவராக இருக்கின்றார். இவர் தனது பெயரில் வங்கி கணக்கு துவங்க கனரா வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது ஆதார் கார்டை வாங்கி பார்த்த வங்கி அதிகாரிகள் அவரது பெயரில் ஏற்கனவே 75 ஆயிரம் ரூபாய் மகளிர் குழு கடன் இருப்பதை சுட்டிக்காட்டி கடனை உடனடியாக அடைக்க வேண்டுமென எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி, “நான் இந்த வங்கிக்கு கூட வந்தது இல்லை. எப்படி கடன் வாங்க முடியும்.?” என்று கேட்டுள்ளார்.
பின்னர், இது குறித்து அப்பகுதி மகளிர் குழு தலைவி மரகதம் என்பவரிடம் கேட்டபோது புஷ்பா என்பவர் ஏற்பாடு செய்தார் எனக் கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார். வங்கி அதிகாரிகள் புஷ்பாவை தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் போனது. இதனை தொடர்ந்து, ராசிபுரம் வி கே ஆர் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஷகிலா, அன்வர் என்ற இருவர் மீனாட்சியின் வீட்டிற்கு, “வந்து நாங்கள் பணத்தை கட்டி விடுகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்.” என கேட்டுக்கொண்டனர்.
ஆனால், அதிர்ச்சி அடைந்த மீனாட்சி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை தொடர்ந்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகளிர் குழுவில் சேர ஆதார் கார்டு கொடுக்கப்படும் போது அதை வைத்து மகளிர் குழு நிர்வாகிகள் இப்படி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஒடுவன்குறிச்சி பகுதியில் சீதாலட்சுமி என்பவர் பெயரில் 5 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி நோட்டீஸ் வந்ததை தொடர்ந்து அவர்களும் கனரா வங்கிக்கு சென்று கேள்வி எழுப்பினர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து தற்போது கோரிக்கைகள் இருந்து வருகிறது.