ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டு தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு வலது கால் இல்லாமல் கட்டைக்காலுடன் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் ஈடுப்பட்டதை கண்டுபிடித்தனர். அதேநபர் துலுக்கானும் தோட்டம், அனகாபுத்தூர், ஒரகடம், ஆகிய இடங்களிலும் வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் பசுபதி தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமை காவலர் மாரி முன்னிலையிலும் தனிப்படை அமைத்து இராயப்பட்டை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் 2021 ஆம் ஆண்டு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தேடுதலில் சிக்கிய மணிகண்டனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தான் ஒரே இடம் திருடுவதில்லை என்பதை தெரிவித்த அவர், வெவ்வேறு இடங்களுக்கு சென்று திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அந்த இருசக்கர வாகனங்களை தரகர் மூலம் விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிகண்டனிடம் இருந்து சுமார் 4 இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.