டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாநில பொருளாதாரத்தில் நிதியின் தாக்கம் குறித்த எந்த மதிப்பீடும் இல்லாமல் வெறும் வாக்கு வங்கியை கவர வேண்டும் என்ற நோக்கில் இலவச வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியல் கட்சிகள் வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை பாதிப்பதால் இலவச அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வை உச்சநீதிமன்ற தலைமை அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது. நேற்றைய விசாரணையின்போது இவ்வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி ரமணா கூறியிருந்தார். இந்நிலையில் அதுகுறித்து இன்றைய அமர்வில் பேசிய தலைமை நீதிபதி, இவ்வழக்கில் கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு விரிவான விசாரணை தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இதில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் என்ன? நீதிமன்றம் மூலமாக நிபுணர் குழுவை நியமிப்பதில் உள்ள சாதக – பாதகங்கள் போன்ற பூர்வாங்க விஷயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் ரமணா குறிப்பிட்டார். இதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இலவசங்கள் அறிவிப்புக்கு தடைகோரும் வழக்கினை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கூறிய தலைமை நீதிபதி ரமணா, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கினை இனி நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரிக்கும் என்று தெரிகிறது.