இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பி கொள்ளக்கூடாது – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவை என்பதால் தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேரலையில் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளால் அந்த தேசம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுவதாகவும், எனவே வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்படும் இதுபோன்ற தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் என்.வி.ரமணா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதால் இந்த வழக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வாக்காளரை கவருவதற்கு

தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அந்த நேரத்தில் வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற இலவச அறிவிப்புகள் ஒரு மாநில அரசை திவாலாகும் நிலைக்குக்கூட தள்ளிவிடும் அபாயம் உள்ளது. அதுபோன்ற இலவசங்கள் கட்சியை பிரபலப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அனைத்து அறிவிப்புகளையும் இலவசங்களாகக் கருத முடியாது. இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. தேர்தலின்போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான உண்மையான அதிகாரம், ஜனநாயக முறை யில் மக்களிடம் இருக்கிறது.

இத்தகைய பிரச்சினைகளை ஆராய நிபுணர் குழுவை அமைக்கலாமா? இலவசம் தொடர்பான இந்த விவகாரத்தில் நீதித் துறையின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கலாம்? நீதிமன்றத்தால் நிபுணர் குழுவை நியமிப்பது என்பது இந்தவிவகாரத்தில் எந்த அளவுக்கு உதவும்? 2013-ம் ஆண்டு இலவசங்கள் கூடாது என வழங்கப்பட்ட சுப்ரமணிய பாலாஜி வழக்கின் தீர்ப்புமீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டுமாஎன்பது தொடர்பான விஷயங்களில் விரிவான விசாரணை தேவை.

யார் தலைமையில் அமர்வு?

எனவே, இந்த வழக்கின் தீவிரம்கருதி இதை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். அதேநேரம் அந்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு யார் என்பதை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார். ஆனால் கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரமணிய பாலாஜி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை, இந்த வழக்கின் தீவிரம் கருதி மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும், எனக்கூறி வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

முதல்முறையாக ஆன்லைனில் ஒளிபரப்பு:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனால் நேற்றைய தினம் அவர் சக நீதிபதிகளுடன் சம்பிரதாய வழக்கப்படி தலைமை நீதிபதியாக அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். அப்போது தேர்தல் இலவச வாக்குறுதிகள் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பொதுமக்கள் ஆன்லைனில் பார்க்கும் விதமாக முதல்முறையாக நேரலையில் விசாரித்து உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.