சென்னை: சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ரேடாரில் பழுது பாக்கும் பணி முடிவடைந்ததால், அதன் பயன்பாட்டை இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா இன்று தொடங்கி வைக்கிறார்.
மழை மேகங்களின் தன்மை, மேகங்களின் நகர்வு, மேகங்கள் கொடுக்க வாய்ப்புள்ள மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.
இந்த ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின்காந்த அலைகள் மூலமாக கிடைக்கும் தரவுகள் மூலம், குறுகியகால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை சென்னை மாநகராட்சி, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது.
இது தொடர்பான ரேடார் படங்கள்வானிலை ஆய்வு மையத்தின் https://mausam.imd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், இணையதள சேவைமற்றும் சமூக ஊடகங்கள் வருகையால், வானிலை நிலவரங்களை வானிலை ஆய்வு மையம் மட்டுமே வெளியிட்டு வந்த காலம் மாறி, வானிலை ஆய்வுமையம் வெளியிடும் ரேடார் படங்களைப் பயன்படுத்தி, தன்னார்வ அடிப்படையில் வானிலையைக் கணிக்கும் ஆர்வலர்கள், வானிலை நிலவரங்களை முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிடத் தொடங்கினர். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதில் கிடைத்த விழிப்புணர்வு அடிப்படையில், வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ரேடார் படங்களை பொதுமக்களே நேரடியாகப் பார்வையிட்டு, நிகழ்நேர வானிலையை தெரிந்துகொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்துக்காக சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் பெறப்படுகின்றன. இதில் பிரதான ரேடாராக சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் உள்ளது. இது ‘எஸ்’ பேண்ட் வகையைச் சேர்ந்தது. சுமார் 400 கிமீ சுற்றளவு வரை மழை மேகங்களை கண்காணிக்கும் திறன் உடையது. இது 21 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
மழை விவரம் அறிவதில் சிக்கல்
இந்த ரேடார் கடந்த 2018-ம் ஆண்டுபழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் இந்த இயந்திரத்தை பழுது பார்ப்பதா அல்லது புதிதாக வாங்குவதா என டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையகம் விரைந்து முடிவெடுக்காததால் பழுது நீக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், வானிலை ஆய்வு மையத்துக்கும், பொதுமக்களுக்கும் நிகழ்நேர மழை விவரங்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கு மழையும் பெய்தது.
சென்னை துறைமுக வளாக ரேடார் பழுது நீக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் ‘எக்ஸ்’ பேண்ட் வகை சிறிய ரேடார் கடந்த ஆண்டு நிறுவப்பட்டது. இது சுமார் 150 கிமீ சுற்றளவுக்கு தரவுகளைச் சேகரிக்கக் கூடியது. இதன்மூலம் கிடைக்கக் கூடிய தரவுகள் இதுவரை சரியாக இருந்ததில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடாரின் தற்போதைய நிலை மற்றும் அது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டபோது, “துறைமுக வளாகத்தில் உள்ள ரேடாரை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து பழுது பார்க்கும் பணிமுடிவடைந்துள்ளது. அதன் பயன்பாட்டை இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா இன்று தொடங்கி வைக்கிறார்’’ என்றார்.