நியூயார்க்: கரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி சீனாவுக்கு 26 விமான சேவைகளை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. சீனாவை சேர்ந்த 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அமெரிக்க அரசு அறிவித்தது. சீனாவில் கரோனா அதிகரித்து வருவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவின் ஜியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான போக்குவரத்து நிறுவனங்களின் செப்டம்பர் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரையிலான 26 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 19 விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தும், 7 விமானங்கள் நியூயார்க்கில் இருந்தும் சீனாவுக்கு செல்பவை ஆகும். அண்மையில் சீனாவில் இருந்து அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்திருந்தது. தற்போது அதற்குப் பதிலடியாகவும், ஏட்டிக்குப் போட்டியாகவும் சீன விமான போக்குவரத்து நிறுவனங்களின் சேவைகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன விமான சேவைகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளதற்கு, வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே கரோனா பரவ தொடங்கியதில் இருந்து சீனாமீதுஅமெரிக்கா கோபத்தில் உள்ளது.தற்போது அதே காரணத்தை சொல்லி சீன விமான சேவைகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.