தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ரொம்ப நாள் கழிச்சு பழைய பாசத்தோட ஆர்.பி.உதயகுமார் என்னை `அண்ணன்’ என்று சொல்லியிருக்கிறார்.

பழைய பகை, கசப்புணர்வு அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுவோம். அம்மாவும் தலைவரும் நமக்குக் காட்டிய லட்சியப் பாதையில் பயணிக்கணும். தி.மு.க என்ற மக்கள் விரோத தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு, எது சரியான வழியோ அதைப் பின்பற்றி நாம் செயல்படுவோம்.
நேற்றுவரை நடந்ததை மறந்துவிட்டு, நல்லது நடக்கும் எனச் செயல்படுவோம் என்ற கருத்தையே நான் சொல்லிவருகிறேன். ஓ.பன்னீர்செல்வம், `அவரவர் அவரவராக இருந்து, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் வருங்காலத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைக்க இணைந்து செயல்பட வேண்டும்’ எனக் கூறுகிறார்.
அதைத்தான் நானும் கூறுகிறேன். `கறந்தபால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது’ எனக் கூறியவர் அண்ணன் காளிமுத்து. ஆனால், அவரே பின்னர் அம்மாவிடம் வந்து சேர்ந்தார். ஒரே கட்சியில் சேருங்கள் என ஓ.பன்னீர்செல்வம் சொல்லவில்லை. அவர்கள் எங்களிடம் வர வேண்டும். நாங்கள் அவர்களிடம் செல்ல வேண்டும் என்று இல்லை. ஒரே வீட்டிலிருந்து பிரிந்து சென்றவர்கள், அவரவர் வீடுகளிலிருந்து பஞ்ச பாண்டவர்களாக இணைந்து துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து சண்டை போடலாம்.

ஜெயக்குமார் மறுபடியும் அரசியலில் தோற்க வேண்டும் என நினைத்தால், அவர் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அதே கோப, தாபத்துடன் செயல்படட்டும். கடந்த தேர்தலை ஒன்றாகச் சந்திப்பதற்காக நான் நட்புக் கரம் நீட்டினேன். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலேயே தீயசக்தி தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. இதை ஜெயக்குமார் மறுத்தாலும் அதுதான் உண்மை.
`அவர் தவறு செய்தார், இவர் தவறு செய்தார்’ எனப் பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் நிலையில், அவர்கள் பழையதையே நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம். அந்தச் சமயத்தில் யார் தலைமையில் என்பது முடிவுசெய்யப்படும்.
எட்டுவழிச் சாலை குறித்து கடந்த ஆட்சியின்போது தி.மு.க முதலில் ஆதரவு தெரிவித்து, பின்னர் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களைப்போல் அந்தர்பல்டி அடிப்பவர்கள் யாரும் கிடையாது. எட்டுவழிச் சாலை எந்தப் பெயரில் வந்தாலும், அங்குள்ளவர்கள், விவசாயிகள், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்தால் அவர்களுடன் சேர்ந்து அ.ம.மு.க தொடர்ந்து போராடும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “பரந்துார் விமான நிலையம் அமைக்க, இழப்பீடு கொடுத்துத்தான் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். விமான நிலையம் வருவது வளர்ச்சிக்குத்தான். ஆனால், விமான நிலையத்துக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அவர்கள் கோரிக்கையைக் கேட்க வேண்டும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உதவி செய்வதற்காக வட்டியில்லா கடன் கொடுக்கும் நிகழ்வாக, தொழில் செய்ய விரும்புபவர்களைத் தூக்கிவிடுவதற்காக மொய் விருந்து விழா நடத்தப்படுகிறது. அனைத்துச் சமுதாயத்தினரும் அதை நடத்திவருகின்றனர். அது ஒரு கலாசார நிகழ்வு. கர்நாடாகவில் வேலை பார்த்த ஐ.பி.எஸ் ஆபீஸரான அண்ணாமலைக்கு அதைப் பற்றி தெரியாமல்கூட இருந்திருக்கலாம், அதுதான் உண்மை.
தி.மு.க எம்.எல்.ஏ மொய் விருந்து நடத்தினார் என்பதற்காக விமர்சனம் செய்திருக்கிறார். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர பழங்கால பழக்கமான மொய் விருந்தை அண்ணாமலை கொச்சைப்படுத்தக் கூடாது. மத்திய அரசு மக்களை பாதிக்காத வகையில் வரிச்சுமையைக் கூட்ட வேண்டும். மேக்கேதாட்டூவில் அணை கட்டினால் தமிழ்நாடு சோமாலியாவாக மாறிவிடும். மத்திய அரசு அதைத் தடுக்க வேண்டும்” என்றார்.