ராஜ்கோட்: ‘பாஜ.விடம் பணம் வாங்கி கொண்டு, அங்கிருந்து எங்களுக்கு வேலை செய்யுங்கள்,’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரமதர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துள்ள உற்சாகத்தில் இருக்கும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க களமிறங்கி இருக்கிறார். இதற்காக, இந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்று பிரசாரம் செய்து வருகிறார். பாஜ.வுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத்தில் நேற்று பிரசாரம் செய்த கெஜ்ரிவால், ராஜ்கோட்டில் அளித்த பேட்டியில், ‘இங்கு எனது கட்சி ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இதில், பாஜ தொண்டர்களும் பயனடைவார்கள். கிராமங்களில் கூட அக்கட்சி தொண்டர்கள் எங்கள் கட்சியில் இணைகிறார்கள். அவர்களுக்கு தரமான இலவச கல்வி, சுகாதாரம், மின்சாரத்தை பாஜ வழங்கவில்லை. ஆம் ஆத்மி அவர்களின் நலனில் அக்கறை செலுத்தும். பெண்களுக்கு ரூ.1,000 இலவசமாக வழங்கும். நீங்கள் (பாஜ தொண்டர்கள்) அக்கட்சியில் இருந்து கொண்டே ஆம் ஆத்மிக்கு வேலை செய்யலாம். அவர்களிடம் பணம் வாங்குங்கள். ஆனால், எங்களிடம் பணம் இல்லாததால் எங்களுக்காக வேலை செய்யுங்கள்,’ என அழைப்பு விடுத்தார்.