மேட்டுப்பாளையம்: கனமழையால் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. 180 பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். இந்நிலையில், நேற்றி முன்தினம் இரவு கல்லார் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் சரிந்தது. ராட்சத பாறைகளுடன் தண்டவாளம் மண்மேடாக காட்சி அளித்தது. இதைப்பார்த்த ரயில் டிரைவர் அதிர்ச்சியடைந்து ரயிலை நிறுத்தினார்.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பயணம் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. முன்னதாக, சுற்றுலா பயணிகளுக்கு விபரம் தெரிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்ததும் ரயில் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் மீண்டும் நீலகிரிக்கு புறப்பட்டு சென்றனர். ரயில்வே ஊழியர்கள் கல்லார்-ஹில்குரோவ் இடையே தண்டவாளத்தில் சரிந்த மண், ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.