சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை: சென்னையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் 1,352 பெரிய சிலைகள் உட்பட 5 ஆயிரம் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர, ஆவடி, தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சிலைகளை கடலில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று காலை 9 மணி முதல் விநாயகர் சிலைகள் வாகனங்களில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

மசூதி, தேவாலயம் உள்ளிட்ட பிற மத வழிபாட்டு தலங்களின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சிலைகள் டிராலிகளில் வைத்து கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட்டன. பெரிய அளவிலான சிலைகள் ராட்சத கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய களிமண் சிலைகளையும் கரைப்பதற்காக கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து சிலைகளை தன்னார்வலர்கள் பெற்று கடலில் கரைத்தனர்.

மறைமலை நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளச்சேரி, திருவான்மியூர் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்கப்பட்டன.

இதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களிலும் பெரிய சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. சிலை கரைக்கும் இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். சென்னை நகர் முழுவதும் நேற்று 21 ஆயிரத்து 800 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னை பெருநகர காவல் எல் லைக்கு உட்பட்ட 1,352 சிலைகள், ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட 503 சிலைகள், தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட 699 என மொத்தம் 2,554 விநாயகர் சிலைகள் சென்னை கடலில் நேற்று கரைக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.