புதுக்கோட்டை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை உளவுத்துறை அதிகாரி ஒருவர் பலப்படுத்தி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட உளவுத்துறை அதிகாரி, விடுதலைப் புலிகளை மீண்டும் பலப்படுத்துகிற வேலைகளிலே ஈடுபடுகிறார். சமூக ஊடகங்களில் ஒரு மாதமாக இந்தச் செய்தி பரவி வருகிறது. அந்த அதிகாரியின் பெயர்தான் எழுதப்படவில்லை. ஆனால் ஆங்காங்கே விடுதலைப் புலிகள் இயக்கம் பலப்படுத்தப்படுகிறது” என்று பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “தமிழக அரசு எங்கேயும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
உளவுத் துறை அதிகாரி ஈடுபட்டுளாரா? நான் சென்று கண்டுபிடிக்க முடியாது. எனவே, இந்த விவகாரம் குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அரசுதான் இது உண்மையா என்பதை கண்டுபிடிக்கும்.
ஏனென்றால், ராஜா பேசுவதையெல்லாம் உண்மையென்று எடுத்துக் கொண்டால் ஒன்றுமே கிடையாது. அவர் நூற்றுக்கு 90 சதவீதம் பொய்யாக பேசுபவர். அவர் ஏதாவது போகிற போக்கில் பேசிவிட்டு செல்வார். ஆனால், யார் என்ன என்ற விவரங்களையெல்லாம் சொல்லவில்லை. எனவே, இது முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும். இதில் உண்மைத்தன்மை இருந்தால், ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள். அதிகபட்சம் அவர் பொய்தான் கூறியிருப்பார்” என்று அவர் கூறினார்.