நாகர்கோவில்: கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணத்தை காஷ்மீரில் நிறைவு செய்யும்போது பிரதமர் மோடியின் பக்தராக ராகுல்காந்தி மாறிவிடுவார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாகர்கோவிலில் நேற்று அவர் கூறியதாவது: கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி இன்று நடை பயணம் தொடங்குகிறார். 1947-ல் இருந்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேரு, பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜிவ்காந்தி ஆகியோர் இந்திய பிரதமர்களாக இருந்துள்ளனர்.
கடந்த 75 ஆண்டுகளில் பெரும்பாலான காலங்களில் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமர் பதவி வகித்துள்ளனர். இக்காலங்களில் இந்தியா என்னவெல்லாம் இழந்தது என்பதைப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஜம்மு, காஷ்மீரை பெயரளவுக்குதான் வைத்திருந்தோம். கச்சத்தீவை மீட்போம் என்று சொன்ன முதல் கட்சி பாஜகதான். நிச்சயமாக கச்சத்தீவு தமிழகத்துக்கு வரும்.
கடந்த 8 ஆண்டுகளில் பிரதமராக நரேந்திர மோடி வந்த பின்னர் ஒரே நாடு, ஒரே மக்கள் என இந்தியா இணைந்திருக்கிறது. எப்போதும் இல்லாத ஒற்றுமை இந்தியாவில் நிலவுகிறது. சகோதர, சகோதரிகளாக மக்கள் இருக்கின்றனர். பொருளாதாரத்தில் இந்தியா உலகத்திலேயே 5-வது இடத்தை பெற்றிருக்கிறது. வறுமைக்கோட்டில் இருந்து மக்கள் மீண்டுள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும்போது நாட்டின் வளர்ச்சியை ராகுல்காந்தி பார்ப்பார்.
ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி எங்கேயும் சொல்லவில்லை. இதை தவறாக காங்கிரஸார் பரப்பி வருவதை பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
காங்கிரஸால் எந்த ஆட்சி மாற்றத்தையும் கொடுக்க முடியாது. தமிழகத்திலேயே திமுக தயவில்தான் உள்ளனர். இந்தியாவில் 70 ஆண்டுகளில் காங்கிரஸ் பிரித்து வைத்திருந்தவற்றை, 8 ஆண்டுகளில் மோடி சீரமைத்துள்ளார். ராகுல்காந்தி தனது நடை பயணத்தை காஷ்மீரில் முடிக்கும்போது மோடியின் பக்தராக மாறிவிடுவார்.
பரம்பொருள் சிவபெருமானின் அடியாளாகத்தான் அண்ணாமலை இருப்பான். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்ட மாட்டேன். என்னை அறைந்தால் அடி கொடுக்கத் தயங்க மாட்டேன்.
தமிழகத்தில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். இதற்கான குழுவை முதல்வரை விமர்சிப்பவரை கைது செய்ய மட்டும் உருவாக்கி இருக்கிறார்களா? அல்லது பிரதமர் உட்பட அனைத்து தலைவர்கள் மீதும் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.