லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் கிசான் திட்டத்தில் 21 லட்சம் போலி விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில், பிரதமர் மோடியின் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் இந்த திட்டத்தில், பல மாநிலங்களில் போலி விவசாயிகளும் பயன் பெற்று வருகின்றனர். இவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணம் திருப்பப் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 21 லட்சம் போலி விவசாயிகள், இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இம்மாநிலத்தை ஆளும் பாஜ.வை சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாகிதான் இந்த உண்மையை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் ,‘உபி.யில் பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்துக்கு 2.85 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 21 லட்சம் பேர், நிதியுதவி பெறுவதற்கு தகுதி அற்றவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் ஒரே வீட்டில் கணவன், மனைவி என பணம் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், 12வது தவணை தொகை இம்மாத இறுதியில் வழங்கப்படும்,’ என தெரிவித்தார்.