எடப்பாடியில் வெள்ள நீர் சாக்கடை கழிவு நீருடன் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியின் மையப் பகுதியில் பாயும், சரபங்கா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், அதன் கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து புகுந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகும் சரபங்கா நதியானது, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி வழியாக பாய்ந்தோடி எடப்பாடி நகரின் அருகே உள்ள பெரிய ஏரியில் சங்கமிக்கிறது. இந்நிலையில் சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், சரபங்கா நதியில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால், எடப்பாடி நகரில் உள்ள சரபங்கா நதி கரையோர குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, நூலகம் மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவிலான வெள்ள நீர் சூழ்ந்தது.

ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் இங்குள்ள வீடுகளில் முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கி வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு இப்பகுதியில் தேங்கியுள்ள உள்ள வெள்ள நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM