புதுச்சேரி: புதுச்சேரியில் ‘எலி பேஸ்ட்’ விற்பனைக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யும் நடவடிக்கையில் சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி சின்னஞ்சிறிய மாநிலமாக இருந்தாலும், தற்கொலையில் அகில இந்திய அளவில் 31.8 சதவீதத்துடன் மூன்றாம் இடம் வகிக்கிறது.2021ம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள் – 370, பெண்கள் – 133, மூன்றாம் பாலினத்தவர் – 1 என மொத்தம் 504 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உடல்நல பாதிப்பு, குடும்பப் பிரச்னை, கடன் தொல்லை, திருமண பிரச்னை, மது குடிக்கும் பழக்கம், காதல் விவகாரம் என, தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் பதிவாகி உள்ளன. இது தவிர, பல தற்கொலை சம்பவங்களில் காரணம் தெரியவில்லை.
இந்த தற்கொலைகளில், எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. வேளாண்மைக்கான உரிமம் பெற்ற உரம், பூச்சி மருந்து கடைகளில், வாங்குவோரின் முகவரியை பெற்றுக்கொண்ட பிறகே எலி மருந்து பசை விற்பனை செய்ய வேண்டும்.ஆனால், உரிமம் இல்லாமல் மளிகை, பெட்டிக் கடைகளில் கூட எலிபேஸ்ட் விற்கப்படுகிறது. இது, தற்கொலை மனநிலையில் இருப்பவர்களின் கைக்கு மிக சுலபமாக கிடைக்கிறது.
எலி பேஸ்ட் சாப்பிட்டால், குடலில் ஒட்டிக் கொண்டு, ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடுகிறது.ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பித்து இறந்து விடுகின்றனர்.கடும் உயிர்கொல்லியான எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் எலிபேஸ்ட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement