புதுச்சேரி: காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு பேட்டியளித்தார். காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலமணிகண்டன் படிப்பிலும், கலை நிகழ்ச்சிகளிலும் முதலிடம் பிடிப்பதை கண்டு பொறாமைப்பட்ட சகமாணவியின் தாய், கடந்த 2ம் தேதி பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் இருந்த சிறுவனுக்கு, அவரது தாய் குளிர்பானம் கொடுத்ததாக கூறி, விஷம் கலந்த குளிர்பானத்தை வாட்ச்மேனிடம் கொடுத்துள்ளார்.
அந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன், வீட்டிற்கு சென்ற பின் பலமுறை வாந்தி எடுத்து, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மாணவனை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவர் பாலமணிகண்டன் செப்டம்பர் 3ம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சிய போக்கால் மகன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து மருத்துவர்கள் முதற்கட்டமாக காரைக்கால் மருத்துவமனை கண்காணிப்பாளரிடமும், பின்னர் புதுச்சேரி மருத்துவமனையிலும் விசாரணையை நடத்தினர். மேலும், மாணவனின் மருத்துவ ஆவணங்களையும், மாணவனின் உடற்கூறாய்வு ஆவணங்களையும் பெற்று, அதற்கான அறிக்கையை நேற்று தாக்கல் செய்த நிலையில் இன்று விவரம் வெளியானது. அந்த அறிக்கையில், காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை; தெரிந்து இருந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளித்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவனுக்கு வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தகவல் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து புதுச்சேரி சுகாதார இயக்குநர் ஸ்ரீராமுலு கூறுகையில், காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை; அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தவறில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் தற்போது விஷக் காய்ச்சல் எதுவும் பரவவில்லை என தெரிவித்தார்.