கோவை: அம்மன் குளத்தில் உள்ள பொதுக் கழிப்பிட வளாகத்தில், ஒரே அறையில் 2 கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சி 66-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் ஓரிடத்தில் மாநகராட்சியின் சார்பில் கடந்த 1995-ம் ஆண்டு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்தின் ஒரு அறையில் மட்டும் 2 கழிப்பிடங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த அறைக்கு கதவுகளும் இல்லை. ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
முறையான திட்டமிடல் இல்லாமலும், யாரும் பயன்படுத்த முடியாத வகையில் இந்த கழிவறையை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்களால் கருத்துகள் பதிவிடப்பட்டன. இதுதொடர்பாக கேட்டதற்கு மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஷர்மிளா அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,‘‘கடந்த 1995-ம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் இந்த கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக கட்டப்பட்டுள்ளன. அதில், சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிடப்பட்ட பின்னர் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் இதில் கதவுகள் பொருத்தப்படவில்லை.
இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய முன்னரே அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம், உபயோகம் இல்லாமல் இருப்பதால், அவற்றை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற முன்னரே முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘இந்த அறையில் இருந்த 2 கழிப்பிடங்கள் கட்டமைப்புகளும் அகற்றப்பட்டு விட்டன. அந்த இடம் சமன் செய்யப்பட்டு, அந்த அறையில் பெரியவர்கள் சிறுநீர் செல்வதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு விட்டன’’ என்றனர்.