தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாய் உடலை வீல் சேரில் மயானத்திற்கு கொண்டு சென்ற மகன்

துவரங்குறிச்சி: திருச்சி அருகே தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாய் உடலை வீல் சேரில் வைத்து மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் வசித்து வருபவர் பெரியசாமி (85). இவரது மனைவி ராஜேஸ்வரி(74). இவர்களது மகன் முருகானந்தம் (50).எலக்ட்ரீசியனான இவருக்கு, திருமணமாக வில்லை. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரிக்கு தோல் நோய் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் தனது தாயை பராமரித்து வந்தார். தாயை கவனிப்பதற்காக பெரும்பாலான நாட்கள் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வறுமை அவரை வாட்டியது.

இந்நிலையில் தாய் ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். வறுமை ஒரு புறம், அறியாமை மறுபுறம் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த முருகானந்தம், தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த  தனது தாய்க்கு, இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் வரமாட்டார்கள் என கருதினார். உயிரிழந்த தனது தாய் உடலை வீல் சேரில் வைத்து துணிகளால் போர்த்தி கட்டினார். பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் 4 கி.மீ தொலைவில் உள்ள செவலூர் பகுதியில் இருக்கும் மயானத்திற்கு எடுத்து சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தார். முருகானந்தத்தின் அறியாமை மற்றும் வறுமையால் நிகழ்ந்த இந்த சம்பவம் மணப்பாறை பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.