மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 2.47 ஏக்கரில் ரூ.47.72 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு மையம் அரங்கை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
மதுரை மாநகர் பகுதியில் சென்னையைப் போல பிரமாண்டமான கருத்தரங்கு கூடம், டிரேட் சென்டர் மற்றும் பல்நோக்கு மாநாட்டு மையம் அரங்கு எதுவும் இல்லை. அதனால், தொழில் முனைவோர்கள், தொழில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் தனியார் நிறுனங்கள் நகர் பகுதியில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்த முடியாமல் திணறி வந்தனர். தனியார் திருமண மண்டபங்கள் இருந்தாலும் அது போதுமான இடவசதி, பார்க்கிங் வசதி இல்லாததால் சென்னையை போல் மிகப் பெரிய வர்த்தக கண்காட்சிகள் மதுரையில் நடக்காமல் வந்தது. அதனால், மதுரையின் வர்த்தகமும், வேலைவாய்ப்பும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளராக விசாகன் இருந்தபோது, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் பல்நோக்கு மாநாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பாரம்பரியமான தமுக்கம் மைதானத்தில் இந்த மாநாட்டு மையம் அமைப்பபதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை சமாளித்து விசாசன், இந்த பல்நோக்கு மாநாட்டு மையம் அமைக்கும் பணியை தொடங்கினார். தமுக்கம் மைதானம், 9.68 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் தற்போது 2.47 ஏக்கரில் இந்த பல்நோக்கு மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டு மையம், தரைத்தளம், கீழ்தளம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகள், தனியார் வர்த்தக கண்காட்சி, கலாச்சார நிகழ்ச்சிகள் தாராளமாக நடத்தும் அளவிற்கு விசாலமான இடசவதியும், இந்த மையத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு 234 இருசக்கர வாகனங்கள், 357 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சமையல் அறையுடன், உணவு உண்ணும் இடம் மற்றும் நவீன கழிப்பிட அறைகள் உள்ளன. இந்த உள் அரங்கு சுமார் 3,500 பேர் வரை பங்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று(செப்.8) முதலமைச்சர் ஸ்டாலின், இந்த பல்நோக்கு மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். அவரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரஜ் ஜித் சிங் வரவேற்றனர். அமைச்சர்கள் நேரு, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கண்ணப்பன், எம்பி சு.வெங்கசேன், எம்எல்ஏ-க்கள் பூமிநாதன் கலந்து கொண்டனர்.
மீனாட்சியம்மன் கோயில் பன்னடுக்கு வாகன காப்பகம்: மீனாட்சியம்மன் கோயில் அருகே பழைய சென்டரல் மார்க்கெட் பகுதியில் ரூ. 41.96 கோடியில் பன்னடுக்கு வாகன காப்பகம் கட்டப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், இனி எளிதில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்யவும், சுற்றிப்பார்க்கவும் செல்லலாம். 110 நான்கு சக்ரக வாகனங்கள், 1,401 இரு சக்கர வாகனங்களை இந்த பன்னடுக்கு வாகன காப்பகத்தில் நிறுத்தலாம். அதோடு இந்த வாகன காப்பத்தின் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மையம், புராதன சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையம் கட்டப்பட்டுள்ளது.