புதுடில்லி :புதுடில்லியில் மறுசீரமைக்கப்பட்டுள்ள ராஜபாதைக்கு, ‘கர்தவ்யா’ பாதை என பெயர் மாற்றம் செய்யும் முன்மொழிவுக்கு புதுடில்லி மாநகராட்சி கவுன்சில் சிறப்பு கூட்டத்தில், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘ஆங்கிலேயர் ஆட்சியின் போது புதுடில்லியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் வைக்கப்பட்ட பெயர்கள் படிப்படியாக மாற்றப்படும்’ என, சுதந்திர தின விழா உரையின் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயர் லோக் கல்யாண் மார்க் என 2015ல் மாற்றப்பட்டது. நம் கடற்படையின் கொடியில் இடம் பெற்று இருந்த ஆங்கிலேய அடையாளம் நீக்கப்பட்டு, சத்ரபதி சிவாஜியின் அடையாளத்துடன் மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போது, புதுடில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜபாதையின் பெயரை, கர்தவ்யா பாதை என மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஹிந்தியில் கர்தவ்யா என்றால் கடமை என்று அர்த்தம்.
இந்த பெயர் மாற்றம் தொடர்பாக புதுடில்லி மாநகராட்சி கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், மாநகராட்சி கவுன்சில் உறுப்பினருமான மீனாட்சி லேகி கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், ராஜபாதையின் பெயரை, கர்தவ்யா பாதை என பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement