புதுடெல்லி: இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு நாட்டு ராணுவமும் நேற்று மாலை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், 40 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதன்பின், இரு நாடுகளும், எல்லையில் படைகளை குவித்தன. இதனால், லடாக் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவிவந்தது. இதனிடையே,லடாக் பகுதியில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 15 சுற்று பேச்சுவார்த்தையில், படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே 16-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து சீனாவும், இந்தியாவும் படைகளை விலக்கிக் கொண்டு அமைதியை கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் சார்பில் நேற்று மாலை கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘இந்தியா – சீனா நாடுகளின் கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒருமித்த உடன்பாட்டையடுத்து, லடாக் எல்லை பகுதியில் பிபி-15 என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் இருந்து இந்தியாவும், சீனாவும் படை வீரர்களை வாபஸ் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இது எல்லை பகுதியில் அமைதிக்கு உகந்த நடவடிக்கை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.