கர்நாடகத்தில் பலத்த மழைக்கு பெண் உள்பட 3 பேர் சாவு

பெங்களூரு: கர்நாடகத்தில் பெய்த பலத்த மழைக்கு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். ஆறுகளில் வெள்ள பெருக்கால் கிராமங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பெண் சாவு

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்வது சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில், வடகர்நாடகா மற்றும் கல்யாண கர்நாடக மாவட்டங்களான பெலகாவி, யாதகிரி, பாகல்கோட்டை, ராய்ச்சூர், பல்லாரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோகாக், சிக்கோடி, முதோல் உள்ளிட்ட தாலுகாக்களில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த நிலையில், பெலகாவியில் பெய்த மழைக்கு வீடு இடிந்து பெண் பலியாகி உள்ளார். பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா கோலிகட்டி கிராமத்தை சேர்ந்தவர் கங்கம்மா (வயது 55). இவர், நேற்று அதிகாலையில் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அவரது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் தூங்கி கொண்டு இருந்த கங்கம்மா மீது இடிபாடுகள் விழுந்து அமுக்கியது. படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். பலத்த மழை காரணமாக அவரது வீடு இடிந்து விழுந்தது தெரியவந்துள்ளது.

மின்னல் தாக்கி 2 பேர் பலி

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா வேதகங்கா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் சிக்கோடியில் உள்ள தரை மட்ட மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதுடன், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 4 கிராமங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கலபுரகி மாவட்டத்தில் பெய்த மழையால் மண்ணூரு கிராமத்தில் உள்ள எல்லம்மா தேவி கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதையடுத்து, எல்லம்மா கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், கனமழைக்கு மின்னல் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். அதன்படி, யாதகரி மாவட்டம் சுரபுரா தாலுகா சிக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நந்தம்மா (35) என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார். தோட்டத்தில் நின்ற அவர் மழை காரணமாக, மரத்திற்கு அடியில் நின்ற போது மின்னல் தாக்கி பலியாகி இருந்தார். இதே மாவட்டம் தேவத்கல் கிராமத்தில் வீட்டு முன்பாக நின்று கொண்டிருந்த ராஜு சிங் (38) என்பவரும் மின்னல் தாக்கி உயிர் இழந்தார். கர்நாடகத்தில் பெய்த மழைக்கு 3 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ேபாக்குவரத்து துண்டிப்பு

இதேபோல் கலபுரகி மவட்டம் ஜீவரகி தாலுகா கல்ஹன்ரேகா கிராமத்தில் பெய்த மழைக்கு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் சின்சனுசுரா கிராமத்தில் இருந்து கல்ஹன்ரகா செல்லும் சாலை முற்றிலும் சேதமானது. பண்டனஹள்ளி கிராமத்தில் பல வீடுகள் நீாில் மூழ்கின. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளுக்குள் முடங்கினர். கடிகேஷ்வரா, புட்புரா, சிந்தபள்ளி கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கன்கலு கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால், அந்த கிராமம் தீவு போல் காட்சி அளிக்கிறது. பீதர் மாவட்டம் சித்தகுப்பா தாலுகாவில் கனமழைக்கு 14 வீடுகள் சேதமடைந்தன. பெனகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின் 2 ஆடுகள் மின்னல் தாக்கி செத்தன.

மழை அளவு

கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் வருகிற 14-ந்தேதி கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பீதர், கலபுரகி, விஜயாப்புரா பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தில் 32.6 சென்டி மீட்டர் மழை ெபய்துள்ளது. சிக்கமகளூருவில் 33 செ.மீ., பீதரில் 32.3 செ.மீ., யாதகிரி, ராய்ச்சூரில் தலா 23.4 செ.மீ., பெலகாவியில் 23.3 செ.மீ., மைசூருவில் 6.9 செ.மீ., ஹாவேரியில் 5.2 செ.மீ., பெங்களூருவில் 0.7 செ.மீ. மழை பெய்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.