மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மூன்றரை வயது நர்சரி செல்லும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட பள்ளி பேருந்து ஓட்டுநரின் வீட்டை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர்.
கடந்து செவ்வாய்க்கிழமை அன்று, போபாலில் உள்ள முன்னணி தனியார்ப் பள்ளியில் நர்சரிக்கு செல்லும் சிறுமி, பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமி வீடு திரும்பியதும், குழந்தையின் உடைகளை யாரோ மாற்றியதை அவரது தாயார் கவனித்துள்ளார். பின்னர் தாய் தனது மகளின் வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரிடம் விசாரித்தார், ஆனால் அவர்கள் இருவரும் குழந்தையின் உடையை மாற்றவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
உடனே உடை மாற்றியது குறித்து குழந்தையிடம் தொடர்ந்து கேட்டதற்கு, பஸ் அங்கிள் தான் உடையை மாற்றியதாகச் சொன்னவுடன், தொடர்ந்து என்ன நடந்தது என்று பலவிதமாகக் கேட்கும் போது, அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகளை மோசமாகத் தொட்டதை உறுதி செய்துள்ளனர்.
அடுத்த நாள் சிறுமியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று அதிகாரிகளிடம் மற்றும் காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓட்டுநரும் மற்றும் பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஓட்டுநரின் வீட்டை அதிகாரிகள் இடித்துள்ளனர். ஓட்டுநரின் குற்றத்துக்காகத் தான் அதிகாரிகள் இடித்ததாக அப்பகுதி மக்கள் கூறினாலும், முறைகேடான முறையில் ஓட்டுநரின் வீடு கட்டியிருந்ததால் தான் வீட்டு இடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கண் முன்பு, சுத்தியலால் ஒட்டுநரின் வீட்டின் சுற்றுச்சுவரையும் அங்கிருந்த சில நபர்கள் இடித்தனர்.
சிறுமியால் அடையாளம் காட்டப்பட்ட ஓட்டுநர் இயக்கிய பேருந்தில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாள் குறித்த காட்சிகள் கிடைக்கவில்லை. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376-AB (12 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பலாத்காரம் செய்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை விசாரணை செய்ய, 3 பேர் கொண்ட குழுவை, பள்ளிக் கல்வித்துறையும் அமைத்துள்ளது.
“குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ’’இந்த சம்பவத்தைப் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாகவே நான் நினைக்கிறேன். எனவே பள்ளி நிர்வாகத்திடமும் காவல்துறை விசாரணை நடத்தவேண்டும். அவர்கள் எதையாவது மறைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
