உலக சுற்றுப் பயணத்திற்கு ஆயத்தமாகும் 'பொன்னியின் செல்வன்'

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம் ஐந்து மொழிகளில் இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இப்படத்திற்காக இதுவரை சென்னை மற்றும் ஐதராபாத்தில் மட்டுமே சில நிகழ்வுகள் நடந்துள்ளது. படக்குழுவினர் மற்ற மொழிகளுக்கும், ஊர்களுக்கும் செல்லாமல் கால தாமதம் செய்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக உலக அளவில் சுற்றுப் பயணத்தை படக்குழுவினர் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டில்லி, துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களுக்கும் தமிழகத்தில் சில முக்கிய ஊர்களுக்கும் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நகரமான தஞ்சாவூரிலும் இப்படத்தின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. செல்லும் இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகள், பேட்டிகள், என முடிந்த அளவிற்கு படத்தைப் பிரபலப்படுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளார்களாம்.

இதனிடையே, இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அமெரிக்காவில் இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.