பெங்களூரு, காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்த 27 வயதான டாக்டரை, அவரதுகாதலியே அடித்து கொன்ற சம்பவம் பெங்களூரில் அரங்கேறி உள்ளது.கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் விகாஸ் ராஜன், 27, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் மருத்துவம் படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
திருமணத்துக்கு ஒப்புதல்
கர்நாடகாவின் பெங்களூரில் புது வேலை கிடைத்ததும் அங்கு குடிபெயர்ந்தார். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிறுவனத்திலும் பணியாற்றினார். விகாஸ் ராஜனுக்கு, பெங்களூரைச் சேர்ந்த பிரதிபா என்ற பெண்ணுடன், சமூக வலைதளம் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தாரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.இந்நிலையில், விகாஸ் ராஜன் பலத்த காயங்களுடன் பெங்களூரு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர் மூன்று நாட்களில் உயிரிழந்தார். முன்பின் தெரியாத நபர்களுடன் ஏற்பட்ட சண்டையில், ராஜன் கடுமையாக தாக்கப்பட்டதாக அவரது காதலி பிரதிபா தெரிவித்தார்.
வாக்குவாதம்
சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில்கடந்த வாரம் வெளியாகி இருப்பதை கண்டு பிரதிபா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விகாஸ் ராஜனிடம் கேட்டபோது, ‘நான் தான் போலி கணக்கு துவங்கி விளையாட்டுக்காக அவற்றை பகிர்ந்தேன்’ என சர்வ சாதாரணமாக அவர் பதில் அளித்தார். இது, பிரதிபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பாடம் புகட்ட அவர் திட்டமிட்டார்.
கடந்த 10ம் தேதி ராஜனை அழைத்துக் கொண்டு, பெங்களூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு பிரதிபா சென்றுள்ளார். அங்கு மேலும் மூன்று நண்பர்கள் இருந்தனர்; அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, நிர்வாண புகைப்படம் குறித்து வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆத்திரம் அடைந்த பிரதிபா, தரை துடைக்கும், ‘மாப்’ எனப்படும் கட்டையால் ராஜனை கடுமையாக தாக்கினார்; அவரது நண்பர்களும் சேர்ந்து மூர்க்கத்தனமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராஜன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, பிரதிபா மற்றும் அவரது நண்பர்கள் கவுதம், சுஷில், சுனில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement