அக்னிபத் திட்டம்: ராணுவ ஆள் சேர்ப்பில் மோசடி… உ.பி-யில் ராணுவ வீரர் கைது!

அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான செயல்முறையில், 1.6 கி.மீ ஓடியதற்குப் பிறகு, புல்-அப் எடுக்க வேண்டும். அதன் பிறகு, 9 அடி பள்ளத்தைத் தாண்டுதல் எனக் கடுமையான உடல் தேர்வு நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மருத்துவச் சோதனை நடைபெறும். அதன் பிறகே எழுத்து தேர்வு நடைபெறும். இதில் கடுமையான மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெற உதவி, அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர்த்துவிடுவதாக உத்தரப்பிரதேசத்தில் மோசடி நடைபெற்றது தெரியவந்திருக்கிறது.

இந்திய ராணுவம்

அக்னிபத் திட்டத்தில் பணிக்கு விண்ணப்பித்தவர்களை ஏமாற்றிய ராணுவ உளவுத்துறையின் உத்தரப்பிரதேச எஸ்.டி.எஃப் வீரரான ஜவான் நரேஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மொபைல் போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரை அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கூடுதல் எஸ்.பி., களப் பிரிவு உ.பி எஸ்.டி.எஃப், பிரிஜேஷ் சிங், “தற்போது முசாபர்நகர் மற்றும் மீரட்டில் நடைபெற்றுவரும் அக்னிபத் ஆள் சேர்ப்பு நடைமுறையில் நடக்கும் மோசமான செயல்களின் தகவல்களைப் பெற்ற பிறகு, நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம்.

ராணுவம்

மீரட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில், செவ்வாய்க்கிழமை மறு மருத்துவச் சோதனைக்கு ஆஜராகவேண்டிய பிரசாந்த் சிங் என்பவர் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், மருத்துவச் சோதனையை தவிர்க்க நரேஷ் குமார் என்பவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் போதும், அடுத்தகட்ட நடவடிக்கையை அவர் பார்த்துக்கொள்வார் என அவரிடம் ஒருவர் கூறியதாகத் தெரிவித்தார். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட நரேஷின் மொபைல் போனைச் சோதனை செய்ததில், அவர் ஏற்கெனவே நான்கு இளைஞர்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதையும், ஐந்தாவதாகத்தான் இவர் சிக்கியிருப்பதும் தெரியவந்தது.

ராணூவ வீரர்கள்

நரேஷ் குமார், பிரசாந்த் சிங்கிடமிருந்து ரூ.2.5 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருப்பதையும் கண்டுபிடித்தோம். விசாரணையில் நரேஷ் குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக இதேபோன்று ராணுவ ஆள் சேர்ப்பு மோசடியில் ஈடுபட்டு சுமார் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, இது தொடர்பாக நரேஷ்மீது சதர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ராணுவத் தரப்பிலும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.