பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: அடுத்து என்ன நடக்கும்?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், இந்த தடையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3இன் கீழ் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில், 1967ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA) இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கபட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உபா சட்டத்தில் உள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. அதன்படி, 30 நாட்களுக்குள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்திற்கு இதற்கான அறிவிப்பை உபா சட்டப்பிரிவு 4இன் கீழ் மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ., அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை மற்றும் மாநில போலீசார் பதிவு செய்த வழக்குகளின் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

தேசவிரோத நடவடிக்கைகளை பி.எஃப்.ஐ., அமைப்பு எவ்வாறு ஊக்குவித்துள்ளது என்பதற்கான பின்னணி குறிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. அதில், அந்த அமைப்பின் சர்வதேச தொடர்புகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை மீறும் நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பதாக இதுகுறித்த விவரம் அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அறிக்கையை பெற்றவுடன், பி.எஃப்.ஐ., அமைப்பை ஏன் தடை செய்யக் கூடாது என்பது பற்றி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு ஷோ-காஸ் நோட்டீஸை தீர்பாயம் அனுப்பும். இரு தரப்பிலிருந்தும் சமர்ப்பிக்கப்படும் விளக்கங்களின் அடிப்படையில், அந்த அமைப்பை தடை செய்ய ஆதாரங்கள் உள்ளதா என்பது பற்றி தீர்ப்பாயம் விசாரணை நடத்தலாம். பி.எஃப்.ஐ., அமைப்பின் வழக்கறிஞர்கள் ஆஜாராகி வழக்கில் வாதாடலாம். அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை ஆதாரத்துடன் முன்வைப்பர். மத்திய விசாரணை அமைப்புகள், மாநில போலீசார் குறுக்கு விசாரணை செய்யப்படவும் வாய்புள்ளது. சாட்சிகளின் அடையாளத்தை மறைக்கவும், அத்துடன் சில ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்க மத்திய அரசு தீர்ப்பாயத்திடம் கோரலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யும் அறிவிப்பை ஏற்கவோ அல்லது ரத்து செய்யும் உத்தரவையோ சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பிக்கும்.

இதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்தபோது 2018ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், கடந்த 2001 ஆம் ஆண்டு சிமி அமைப்புக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிமி அமைப்பு மீதான தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயத்தில் விசாரணை செய்யப்பட்டு அந்த தடையானது மேலும் நீட்டிக்கப்பட்டது. அதேபோல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடையும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.