‘அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணியினருக்கு பணி’ – கவுன்சிலர் கோரிக்கைக்கு மேயர் பிரியா அளித்த பதில்

சென்னை: அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (செப்.29 ) நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நேரமில்ல நேரத்தில் பேசிய 98-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி, வார்டு 4-இல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் 10 சிப்பங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதால் பணி மெத்தனமாக நடைபெற்று வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, “சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை வேகப்படுத்தி உள்ளோம். வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால்களை பிரதான கால்வாய்க்கு இணைக்கும் பணி அக்டோபர் 10-க்குள் முடிக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

அடுத்து பேசிய 102-வது மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன், “கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டவர்களே அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். தங்கள் வார்டு பகுதியில் உள்ள திமுக மகளிர் அணி நிர்வாகிகளை அம்மா உணவகத்தில் பணியமர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, “அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவி குழு மூலமாகவே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு தேவையான உரிய நபர்களை பரிந்துரைத்தால் உரிய நடவடிக்கை எடுத்து அம்மா உணவகத்தில் பணியமரத்தப்படுவார்கள்” என்றார்.

இறுதியாக நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் குழு தலைவர் ராமலிங்கம், “மண்டலக் குழு, நிலைக் குழு நியமனக்குழு,மற்றும் வார்டு குழு தலைவருக்கு அரசின் அனுமதி பெற்ற வாகனம் வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதனை வழிமொழிந்து பேசிய துணை மேயர் மகேஷ் குமார் இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.