இரண்டு மாநிலங்களில் மட்டும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம்!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சுமார் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது. இந்த காற்றாலை மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காற்றாலையை மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்பொழுது காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விவரங்களை அந்நிறுவன அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிய இணை அமைச்சர் கூறியதாவது “இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குறிப்பாக குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் காணப்படுகின்றன. ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ராமேஸ்வரம் நகருக்கு முழுவதும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வருங்காலங்களில் ஏழு மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு போதுமான அளவு இந்தியாவில் வாய்ப்பும் வளமும் காணப்படுகின்றன. சூரிய மின்சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்