”அக்டோபரில் சேர்ந்து டிசம்பரில் தேர்வு எழுதுவதா”- ஓராண்டு படிப்பு குறித்து நீதிபதி கருத்து

பல்கலைக்கழகத்தில் அக்டோபரில் சேர்ந்தவர் டிசம்பரில் முதலாண்டு தேர்வை எழுதுகிறார், இது முழு படிப்பையும் படித்தது ஆகாது. ஓராண்டு படிப்பை ஒரு மாணவர் குறைந்தது 10 மாதங்கள் பூர்த்தி செய்யும் வகையிலான திட்டத்தை பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும் என மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
பட்ட படிப்பு முடித்து சான்று வழங்கும்போது சம்பந்தப்பட்ட படிப்பை படித்ததற்கான வருடங்களை சான்றிதழில் குறிப்பிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனியைச் சேர்ந்த செண்பகம் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2012ல் பிஎஸ்சி முடித்தேன், 2013ல் பிஎட் முடித்தேன் மற்றும் பெரியார் பல்கலையில் கடந்த 2015ல் எம்எஸ்சி முடித்தேன். இந்நிலையில் கடந்த 2017ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியானது. வேலைவாய்ப்புக்காக பதிவு மூப்பிற்கான ஒரு மதிப்பெண்ணுடன், 78 மதிப்பெண் கிடைத்ததால், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். ஆனால் இறுதி பட்டியலில் என் பெயர் இல்லை. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
image
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி,”பெரியார் பல்கலையில் கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என்ற கணக்கில் வகுப்புகள் நடக்கின்றன. மனுதாரர் காலண்டர் ஆண்டில் ஆகஸ்ட் 2013ல் சேர்ந்துள்ளார். ஜனவரி 2014ல் தேர்வு நடந்துள்ளது. இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் 2014ல் நடந்துள்ளது. இதன்படி மனுதாரர் 2 ஆண்டு படிப்பையும் முடித்துள்ளார். ஜூன் முதல் மே வரையில் கல்வி ஆண்டும், ஜனவரி முதல் டிசம்பர் வரை காலண்டர் ஆண்டும் கணக்கிடப் படுகிறது. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான பட்டியலில் மனுதாரர் பெயரை சேர்த்து பட்டியல் வெளியிட்டு, 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என உத்திரவிட்டார்.
image
மேலும் அக்டோபரில் சேர்ந்தவர், டிசம்பரில் முதலாண்டு தேர்வை எழுதுகிறார். இது முழு படிப்பையும் படித்தது ஆகாது. இரண்டு மாத இடைவெளியில் ஓராண்டு படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது. ஜூனில் சேர்ந்தால், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தான் தேர்வு நடக்கும். அப்போது அந்த மாணவர் குறைந்தது 10 மாதம் படித்திருப்பார். அதன்பிறகு அவர் தேர்வெழுதுவார். எனவே, ஓராண்டு படிப்பை ஒரு மாணவர் குறைந்தது 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகு தேர்வு எழுதிடும் வகையிலான திட்டத்தை பெரியார் பல்கலையில் கொண்டு வர வேண்டும். அதேநேரம் பட்ட படிப்பு முடித்து சான்று வழங்கும்போது சம்பந்தப்பட்ட படிப்பை படித்ததற்கான வருடங்களை சான்றில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.