சென்னை: ஓட்டுநர்கள் இல்லா மெட்ரோ ரயில், சென்னையில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இரண்டு கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிடப்பட்டன. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என முதல் கட்டம் 2 வழித்தடங்களைக் கொண்டது. இந்த முதல் கட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாதவரம் முதல் சிப்காட் வரை, லைட்அவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என இது 3 வழித்தடங்களைக் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்தம் 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 63,246 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட வழித்தடங்கள் அனைத்திலும், மனிதர்களால் அல்லாமல், சிக்னல்களின் அடிப்படையில் ரயில்கள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றில் ஓட்டுநர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்த இரண்டாம் கட்டம் 118.9 கிலோ மீட்டர்களைக் கொண்டது. இதில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைய இருக்கின்றன. இதற்கான பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் இல்லா மெட்ரோ ரயில் இந்தியாவில் முதல்முதலாக கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 38 கிலோ மீட்டர் தொலைவுக்கான பாதையில் இந்த ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.