காணாமல்போனதாக கூறப்பட்ட பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கலைச்செல்வன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (15) மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரை கடந்த ஐந்தாம் தேதி முதல் காணவில்லை எனவும் 6ஆம் தேதி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் காணமல் போன ராஜேஸ்வரி இன்று கொடுக்கன்குப்பம் கிராமத்தில் துளசி என்பவரது விவசாயக் கிணற்றில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வளத்தி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் மேல்மலையனூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவி தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது கொலையா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என வளத்தி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
