ரோடு போட்ட ரசீது மட்டுமே உள்ளது! கரூரில் போடாத சாலைக்கு ரூ.5 கோடிக்கு பில்! 6 மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை!

சுமார் 111 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 டெண்டர் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது!

கரூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு இருந்தது. சுமார் 36 டெண்டர்கள் விடப்பட்டதில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு 20 டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் 111 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்நிலையில் அறப்போர் இயக்கம் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை வைத்து சாலை போடாமல் ரூ.5 கோடி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தது. 

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உட்பட ஐந்து முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அறப்போர் இயக்கத்தின் சார்பாக 20-04-2022 அன்று கரூர் மாவட்டத்தில் போடாத சாலைக்கு மாநில நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கியது சம்பந்தமான ஆதாரங்களின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீதான முதல் தகவல் அறிக்கை பதியுமாறு கோரி கடிதம் எழுதியுள்ளது. 

அந்த கடிதத்தில் கடந்த மார்ச் மாதம் மாநில நெடுஞ்சாலைத்துறை கரூர் மாவட்டத்தில் சாலை போடாத ஒப்பந்ததாரருக்கு ரூ 3.38 கோடி வழங்கி உள்ளது. கரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட இரண்டு உள்ளாட்சி சாலைகளுக்கான ஒப்பந்தத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் சாலை போடாமல் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த கடிதத்தில் “நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை கரூர் மாவட்ட உட்கோட்டம் மற்றும் திருப்பூர் வட்டத்தில் புதிய சாலை அமைத்தல் மற்றும் செப்பனிடும் பணிக்காக 31 டெண்டர்கள் சுமார் 163 கோடி ரூபாய்க்கு வெளியிடப்பட்டது. அதில் 20 ஒப்பந்தங்கள் சங்கர்ஆனந்த் இன்ஃப்ரா ஒப்பந்ததாரருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ111 கோடி, மொத்த ஒப்பந்தங்களில் 65% வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்தான ஆதாரங்களும் கடிதத்துடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகாரில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதற்கு துணையாக இருந்த அதிகாரியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ வேலு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார். இதன் காரணமாக புகார் சம்பந்தமாக அரசு அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். 

அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் கரூரில் போடாத சாலையை போட்டதாக சொல்லி பணம் திருடிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சதி முயற்சிகளை தடுத்து அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அறப்போர் இயக்கம் மீண்டும் புகார் என கடிதம் ஒன்றை இணைத்து ட்விட் செய்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.