என்ஐஏ சோதனையால் வீசி சென்றனரா?
தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவு துப்பாக்கிப் புழக்கம் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தொப்பூர் வனப்பகுதி அருகே உள்ள கஸ்தூரிகொம்பை கிராமத்தின் அனுமன் கோயில் அருகே வனப்பகுதியின் பாறை இடுக்கில் இருந்து நான்கு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை யார் வீசி சென்றார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் சமுதாயக்கூடம் அருகில் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாட்டுத் துப்பாய்களை யார் வீசி சென்றார்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது யூட்யூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது சம்பந்தமான குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் வீசி சென்றுள்ளனரா? அல்லது ஏதேனும் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீசி சென்று உள்ளனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.