மதரீதியாக மக்கள் தொகை பெருக்க சர்ச்சை இந்தியாவில் அதிகம் காண்டம் பயன்படுத்துவது முஸ்லிம் தான்: ஆர்எஸ்எஸ்.சுக்கு அசாதுதீன் பதிலடி

ஐதராபாத்: நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்றும் முஸ்லிம்கள்தான் அதிகமாக காண்டம் பயன்படுத்துகின்றனர் என்று அசாதுதீன் ஒவைசி எம்பி தெரிவித்தார். தசரா விழாவை ஒட்டி மகாராஷ்டிரா, நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘மத ரீதியிலான மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

மக்கள்தொகை கொள்கையை வகுத்தால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிட்டும். மத ரீதியிலான மக்கள்தொகை பெருக்கம், எதிர்காலத்தில் பூகோள ரீதியாகவும் எல்லைப் பிரச்னைகளை உருவாக்கும்,’ என பேசினார். இந்தியாவில் முஸ்லிகளின் மக்கள்தொகை அதிகமாகி வருவதையே பகவத் இதில் மறைமுகமாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், எம்பி.யுமான அசாதுதீன் ஓவைசி, இதற்கு பதில் கொடுத்தார்.
அவர் பேசுகையில், ‘மக்கள் தொகை அதிகரிப்பு பற்றிய புள்ளி விவரங்களை வைத்து கொண்டு மோகன் பகவத் பேச வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை பெருக்க விகிதம் அதிகளவில் சரிந்துள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்கள்தான் அதிகளவில் காண்டம் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் இரு பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. குஜராத்தில் கர்பா நடன நிகழ்ச்சியில்  கல் வீசியதாக முஸ்லிம் இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து  அடிக்கிறார்கள். சுற்றி நிற்பவர்கள் அதைப் பார்த்து விசிலடிக்கின்றனர். இதுதான் இந்திய ஜனநாயகமா? இங்கு தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.