கான்பெரா: ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவுக்கு சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். இதன் பிறகு இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக நீண்ட காலமாக மேற்கத்திய நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பா), இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்குப் பதில் ராணுவ சர்வாதிகார பின்னணி கொண்ட எங்கள் அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) ஆயுதங்களை விநியோகம் செய்தன. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நாங்கள் முடிவு எடுக்கிறோம்.
கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்து அந்த நாட்டு அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஜனநாயக சமுதாயத்தில் வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது. குறிப்பாக வன்முறை, பிரிவினையை தூண்டும் அமைப்புகள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஜனநாயக நாடுகள் (கனடா) தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் கூறும்போது, ‘‘குவாட் கூட்டணி நாடுகள் கொள்கை உறுதியுடன் செயல்படுகின்றன. எங்களது உறவு நம்பகமானது. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்திருப்பதை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த செப்டம்பரில் ரஷ்ய அதிபர் புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்தபோது இது போருக்கான காலம் இல்லை என்று சுட்டிக் காட்டினார். பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்’’ என்றார் அவர்.