தனுஷ்கோடி | 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம்: கடலில் காற்றாலை அமைக்க இடம் தேர்வு

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளதால், நாட்டில் முதல் முறையாக கடலில் காற்றாலை அமைக்க தனுஷ்கோடி கடற்பகுதியை மத்திய எரிசக்தித்துறை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 09.09.2015 அன்று வெளியிட்டது. இதன்படி மத்திய எரிசக்தி துறையின் சார்பில் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கத்தில், நாட்டில் உள்ள 7600 கி.மீ. நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அதிக காற்று வீசும் கடற்கரை உள்ள மாநிலங்களாக தமிழகம் மற்றும் குஜராத் தேர்வு செய்யப்பட்டன.

இதில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடற்பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ.வேகத்திலும் காற்று வீசுவது தெரியவந்தது. இதற்காக ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் உயர் கோபுரம் அமைத்து அதிநவீன கருவியை பொருத்தி காற்றின் வேகம் குறித்த ஆய்வு பணிகள் 2015-ல் இருந்து 2020-ம் ஆண்டு வரையிலும் நடைபெற்றது. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா தனுஷ்கோடி கடலில் காற்றாலைகள் அமைப்பதற்காக நேரில் ஆய்வு செய்தார். மேலும் தனுஷ்கோடி கடலில் அமைய உள்ள காற்றாலைகளின் மாதிரி படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

தனுஷ்கோடி கடலில் அமைய உள்ள காற்றாலைகளின் மாதிரி படம்.

இதுகுறித்து மத்திய எரிசக்திதுறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. இதில் தமிழகத்திலும், குஜராத்திலும் தலா 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. குறிப்பாக, தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. இங்கு 2 காற்றாலை டர்பைன்களை நிறுவ உள்ளோம். இதன்மூலம் ராமேசுவரம் முழுவதும் மின்சாரம் விநியோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் பகவந்த் கூபா. (அடுத்த படம்) தனுஷ்கோடி கடலில் அமைய உள்ள காற்றாலைகளின் மாதிரி படம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.