ஊட்டி ‘செவாய்’ ஒட்டலில் நுழையும்போதே ‘டுர்… டுர்’ என்று யூனிட் வேன்கள் மேடு ஏறி வந்தன. சரிதான். அமிதாப்பச்சன் படப்பிடிப்புக்குக் கிளம்பி விட்டாரோ என்ற சந்தேகம்! உள்ளே சென்று பார்வையை அலையவிட்டதும். அதோ… ரூமை விட்டு வெளியே வருகிறாரே. ரைட்…. அமிதாப்தான்! அருகே சென்றோம். வணக்கம் சொன்னோம். அடையாளம் கண்டு கொண்டார். (கோவை பொதுக் கூட்டத்துக்கு அவர் வந்திருந்தபோதே பேட்டிக்காக நேரம் கேட்டோம். ஊட்டி வரச்சொல்லி இருந்தார்!)
“உங்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. ஸாரி! இருந்தாலும் நீங்கள் இன்று முழுவதும் என்னுடன் இருக்கலாம். படப்பிடிப்பு இடைவெளியில் உங்களுடன் பேசுகிறேன்.” “நாங்கள் எப்போது வருவது?” என்று கேட்டோம். உடனே அவருடன் இருந்த தாராசபி என்ற கோவை இளைஞரை அறிமுகம் செய்து, “இவருடன் வந்து விடுங்கள்” என்று சொல்லி, அமிதாப் புறப்பட்டுவிட்டார்.
அமிதாப்பின் பி.ஏ. பிரவின் என்பவரை அறிமுகம் செய்துகொண்டு, “அமிதாப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்” என்றோம். “ஸாரி, பாஸைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன்” என்று அன்புடன் மறுத்துவிட்டார்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு கிளம்பினோம். பழைய மைசூர் ரோடில் 8 கி.மீ. தூரம் சென்றால் அருமையான லொகேஷன். பாதை என்னமோ மிகவும் மோசம். ஒரு வாரமாக அங்குதான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னார்கள். வழி நெடுக பஸ், வேன், கார்களோடு பாதுகாப்புக்கு போலீஸ் வேனும், டாக்டருடன் ஆம்புலன்ஸ் வேனும் நின்றது! (‘கூலி’ பட விபத்துக்குப் பிறகு டாக்டருடன் ஒரு ஆம்புலன்ஸ் வேன் எப்போதும் தயாராய் இருக்கிறதாம்!) கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு மரப் பாலம் கண்ணில் பட்டது. அதில் அமிதாப், வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
சண்டை முடிந்தது. எங்களை மரப்பாலத்துக்கே அழைத்தார் அமிதாப். அவரிடம் படம் பற்றிக் கேட்டோம்: “மன்மோகன் தேசாயின் ‘மர்த்’ என்ற படம். ‘ஷோலே’ டைப்!” என்றார் அவர்.
“நேற்று கோவையில் நீங்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக உங்களுக்குத்தான் நிறைய கூட்டம் வந்தது என்று பேசிக் கொள்கிறார்களே! அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“நேற்று கூட்டத்தைப் பார்த்ததும்… ‘I was very flattered’! ஒருவேளை என்னை முதன்முறையாக அரசியல் மேடையில் பார்க்கப்போகிறோம் என்ற ஆவலில் கூட்டம் வந்திருக்கலாம்; தனிப் பட்ட முறையில் என்னைக் கேட்டால், கூட்டம் சேரும் அளவுக்கு நான் இன்னும் பெரிய அரசியல்வாதி ஆகவில்லையே!”(நடிகர் என்பதால்தான் கூட்டம் வந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்கிறாரோ?!) “எனி ஹெள, எதிர்காலத்தில் இந்தக் கூட்டம் இருந்தால், நிச்சயம் என்னை உற்சாகப்படுத்தும்” என்றார் அமிதாப் கூடவே.
“அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் உங்கள் விருப்பமா அல்லது பிரதமர் ராஜீவின் விருப்பமா…?”
“நானும் ராஜீவும் ஒரே ஊரில் பிறந்தோம். சின்ன வயதிலிருந்தே குடும்ப நண்பர்கள். அப்படிப் பழகிய நண்பர். தனது சகோதரரையும் இழந்து, தாயும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலை. அவருக்கு நண்பர்களின் ஆதரவும், நெருக்கமானவர்களின் ஆதரவும் தேவைப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் அவருக்கு உதவியாக இருக்கவேண்டும். சினிமாவில் நண்பனுக்காக எவ்வளவோ செய்கிறோம், நிஜ வாழ்க்கையிலும் ஏன் நண்பனுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது? அதோடு நாட்டிலுள்ள பாமர – மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.”
இந்தக் கேள்விக்கு அவரின் பதில் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. பதில் கூறி முடித்த பிறகு சிறிது நேரம் எதுவும் பேசாமல் என்னமோ நினைத்துக் கொண்டே இருந்தார்.

“இப்படி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தால், எப்படி நீங்கள் கட்சிக்காக, மக்களுக்காக முழு நேரம் பாடுபட முடியும்?’ என்றோம்.
“இன்னும் முடித்துக் கொடுக்க வேண்டிய படங்கள் இரண்டுதான் இருக்கின்றன. அதற்குப் பிறகு ஜூலையில் டில்லி சென்று செட்டில் ஆக இருக்கிறேன். எனது தொகுதி (அலகாபாத்) டில்லிக்கு அருகில் இருப்பதால், உண்மையாகவே பின்தங்கிய நிலையில் இருக்கும் எனது தொகுதி முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவேன். “கட்சி என்னை எந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பது தெரியாது. தேசிய அளவில் கட்சி நலனுக்காக எனது பணி தேவைப்பட்டால் நிச்சயம் செய்யக் காத்திருக்கிறேன்..”
“அப்படி என்றால் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டீர்களா…?”
“அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், நான் சில படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்துகிறார்கள். நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால், நிச்சயம் சினிமா உலகமும், ரசிகர்களும்தான் காரணம். ஆகவே, அதிலிருந்து முற்றிலும் விலக முடியாது போல் இருக்கிறது.”

“இதுவரை அரசியலில் நீங்கள் கண்ட அனுபவம்?”
“வெளிப்படையாக சொல்லப்போனால், நாம் சந்திக்கும் மனிதர்களிடம் வெளியே என்ன பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, அதே கேரக்டர் உள்ளுக்குள் இருக்கிறதில்லை. வெளியே ஒருமாதிரி நடந்துக்கிறாங்க.. எனக்கு இது புதுசாத் தெரியுது. “அரசியல்லே நுழைஞ்சதாலே எனக்கு உலகத்தைப் பற்றித் தெரிஞ்சுக்க ஒரு நல்ல சான்ஸ்னு நெனைக்கறேன். நான் அரசியல்ல நுழையும்போதே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க, ‘அரசியல் மிகவும் தந்திரமான விளையாட்டு. அதோட விளையாட ‘அதிபுத்திசாலி’யா இருக்கணும்… இல்லாட்டி கஷ்டம் அப்படின்னு. என்னைப் பொறுத்தவரை என் மனசு என்ன சொல்கிறதோ அதே போலத்தான் நடந்து கொள்வேன்.
கூர்மையான புத்தியை உபயோகித்துக் காரியத்தைச் சாதிக்க விரும்பவில்லை… ஒருவேளை, மனசாட்சிக்காகப் பயந்து நடப்பதால், அரசியல் வாழ்க்கையில் நான் தோல்வி கூட அடையலாம். ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை… அதை என் வெற்றியாகத்தான் நினைப்பேன்…”
”ராஜீவ் காந்தியின் நிர்வாகத்தைப் பற்றி..?”
“ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார். நாட்டைப் பல திட்டங்கள் மூலம் சீர்திருத்தி முன்னேற்றத்துக்குக் கொண்டு வருவதில் ராஜீவ் மிகவும் ஆவலாக இருக்கிறார். ‘அவர் எங்களிடம் அடிக்கடி சொல்வார், ‘நான் மற்றவர்களைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கறதே இல்லை. என்னை மற்றவர்கள் கட்டுப்படுத்தணும்னுதான் விரும்பறேன்’ என்பார்… இளைய பிரதமராக இருப்பதால் எதிலும் வேகமாகச் செயல்படுகிறார். அவர் விரும்புவது எதிலும் விரைவான முன்னேற்றம்.”
“தென்னிந்தியாவில் (தமிழ்நாடு. ஆந்திரா, கர்நாடகா) இந்திரா காங்கிரஸ் வளர்ச்சியடையாமல் மந்தமாக இருப்பதற்குக் காரணமென்ன?”
“தெற்கே தனி மனிதரின் கவர்ச்சிதான் தலைநிமிர்ந்து நிற்கிறது. எம்.ஜி.ஆர். என்.டி.ஆர்., ஹெக்டே இவர்களுக்கு மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு நிறைந்திருப்பது, இந்திரா காங்கிரஸ் மந்தமாக இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். “இன்னொரு காரணம், தென்னிந்தியாவில் காங்கிரஸ் (இ) கட்சிக் கட்டுப்பாடு இழந்திருப்பதாக ராஜீவ் காந்தி கருதுகிறார். ஆகவே, கூடிய விரைவில், கட்சி நிர்வாகத்தை மாற்றியமைத்து ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார், அதற்குப் பிறகு நிச்சயம் காங்கிரஸ் (இ) கட்சி வெற்றி பெறும்.” அதற்குள் அடுத்த காட்சிக்கு எல்லாம் ரெடி!
அமிதாப்பைக் கொஞ்சம் விட்டோம். ஹீரோ (அமிதாப்) ஹீரோயினோடு (அம்ரீதா சிங்) குதிரை சாரட்டில் வர, அந்தப் பாலத்தை வில்லன் கோஷ்டியினர் குண்டு வைத்துத் தகர்க்கிறார்கள். இந்தக் காட்சியைப் பிய்த்துப் பிய்த்து தனித் தனியே எடுத்தார்கள். அமிதாப் நடித்துவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டார்.
“இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைத் தீர்ப்பதில் உங்கள் சொந்தக் கருத்து என்ன?”
“இந்த விஷயத்தில் அரசியல்வாதி என்ற முறையில் நான் ஜூனியர்தான். ஆனால், இந்தியன் என்ற முறையில், அங்கு நடத்தப்படும் கொலைகளைக் கண்டிக்கிறேன்; அநீதியான முறையில் நடக்கும் அட்டூழியங்களைத் தீர்க்க விரைவில் முயற்சி செய்யவேண்டும். இந்த அட்டூழியங்களுக்குக் காரணம் ஏதோ ஒரு சதித் திட்டத்தின் விளைவுதான். முன்பு இல்லாத இந்தப் பிரச்னை இப்போது இவ்வளவு தூரம் வெடித்திருப்பதற்குத் தனிப்பட்ட சிலரின் சுயநல நடவடிக்கைகள்தான் காரணம். அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருக்கும் ஆணிவேர்களை வெட்டியெறிய வேண்டும்.”

“உங்களின் அரசியல் நுழைவை உங்கள் மனைவி ஜெயாபாதுரி விரும்புகிறார்களா?”
“இதில் அவளின் விருப்பு, வெறுப்பு என்று இடமில்லை; தேர்தல் சமயத்தில் என் தொகுதியில் முக்கிய வேலைகள் அனைத்தையும் அவள்தான் பொறுப்பாகக் கவனித்தாள். என்னுடைய விருப்பத்துக்காக அவள் எதையும் அன்பாகச் செய்வாள்; அதோடு கணவனின் விருப்பம்தானே மனைவியுடையதாக இருக்கும்.”
“இளம் வயதுக் காதலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த வயதில் உங்களுக்கு அனுபவம் உண்டா?”
“இளம் வயதில் காதல் தேவைதான்; But it must be healthy, உலகத்தில் இன்று ஒரு பிணைப்பே ஆணும் பெண்ணும் பழகுவதால்தானே ஏற்படுகிறது! காதல் கட்டுமீறிப் போவதால்தான் ஆபத்து ஏற்படுகிறது. அதோடு, பெற்றோர்களும் ஜாதி மதத்தைப் பார்க்காமல் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைப் போலவே காதல் திருமணங்களையும் நினைத்து அனுமதிக்கலாம். “நான்கூடக் கல்லூரி பருவத்தில் பெண்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவேன்; அதைப் பார்த்த பெரியவர்கள் என் தாயிடம், ‘உன் மகன் பெண்களுடன் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து அரட்டையடிக்கிறான்’ என்பார்கள். அதற்கு என் தாய், ‘பரவாயில்லை, அவன் எதிலும் கட்டுப்பாடாக இருப்பான்’ என்பார்கள்.”
“இன்று நீங்கள் ஓர் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். இதைவிட இன்னும் சாதனை புரியவேண்டும் என்ற நினைவு உண்டா?”
“நான் வாழ்க்கையைத் தொடங்கும் பொழுதே அதைச் சாதிக்க வேண்டும், இதைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது; I am not ambitious; எனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அதற்காகக் கஷ்டப்பட்டு உழைப்பேன். வெற்றி வந்தால் ஏற்றுக்கொள்வேன், இல்லாவிட்டால் சோர்ந்து போகமாட்டேன். எந்த ஒரு நிலைமையையும் எதிர்பார்த்து நான் எதுவும் செய்ததில்லை. “இன்னும் கொஞ்ச காலத்தில் படவுலகில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுக்கலாம் என்று இருந்தேன். சூழ்நிலை, விதி என்னை அரசியலுக்கு இழுத்துவிட்டது. இனிமேல் அதற்காகப் பாடுபடுவேன். ஆனால், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்கமாட்டேன்.”
“வாழ்க்கையில் எதையோ இழந்து விட்டோம் என்று நீங்கள் நினைத்தது உண்டா…?”
“நான் எதையுமே எதிர்பார்ப்பது இல்லை; எதிர்பார்த்தால்தானே ஏமாறுவதற்கு! என்னைப் பொறுத்தவரை எதையும் நான் இழந்ததாக நினைப்பதே இல்லை.”
“கடவுள் பக்தி உங்கள் விபத்துக்குப் பின்னால்தான் ஏற்பட்டதா?”
“நான் நாஸ்திகன் இல்லை. என் வீட்டில் பூஜை அறை உண்டு; ஆனால், மூட நம்பிக்கை இல்லை. விபத்திலிருந்து மீண்டு நான் உயிர் பிழைத்ததில் என் கடவுள் பக்தியும் ஒரு காரணம். “அதோடு, எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவர்க்கும் இன்றும் எங்கு சென்றாலும் நன்றி சொல்வேன். அவர்கள் வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இன்னமும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறேன்.” (ஏப்ரல் முதல் வாரத்தில் கூட ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, தாய் மூகாம்பிகை கோயில் சென்று வந்தாராம்!)

“உங்கள் இரண்டு குழந்தைகளும் எப்படி, எந்த முறையில் உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“அவர்கள் சாதாரண இந்தியக் குடிமகனாக இருப்பதையே தான் விரும்புகிறேன்; அவர்களுக்காக நான் எதையும் திட்டமிட்டது இல்லை; அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறேன். அவ்வளவுதான்.”
“இந்திய திரையுலகத்தரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு ஏதாவது நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா?”
“இன்று இந்திய திரையுலகம் மிகவும் நல்ல நிலையில் உலக அளவில் இருக்கிறது. அதற்குத் தேவையான சில Advanced Technique வசதிகளைச் செய்து தர ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.”
“உங்கள் சங்கங்களின் (Fan Associations) இயக்கத்தை நீங்கள் நிறுத்தி வைத்திருக்கிறீர்களாமே. ஏன்…?”
“எனது அனுமதி இல்லாமலேயே பல சங்கங்களைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், பண வசூல் வேறு செய்திருக்கிறார்கள்; ஆகவே, அனைத்தையும் நிறுத்திவிட்டு, என் அனுமதியுடன் அங்கீகாரம் கொடுத்துப் புதிதாக சங்கம் அமைக்க உள்ளேன். அந்த சங்கங்களின் மூலம் மக்களுக்கு நற்பணி செய்ய ஏற்பாடு செய்வேன்.” அடுத்த ‘ஷாட்’டுக்காக அமிதாப்பை அழைத்தார்கள். நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றோம்.
– பி. செந்தில்நாயகம்