நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நிற்க தயார்- செல்லூர் ராஜூ!

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அவர்; “சந்திரமுகி படத்தில் பேயை பார்க்க சென்று மாட்டிகொண்டு புலம்பித் தவித்த வடிவேல் போல, முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைமை இருக்கிறது” என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “எந்த இயக்கத்திலும் மக்களை வசீகரிக்க கூடிய, வலிமையான தலைவர் இல்லை.

அதிமுகவில் தற்போது வலிமையான தலைவர் இல்லை என சொல்லும் ஸ்டாலின், அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என ஆருடம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், ஆட்சி 4.5 ஆண்டுகள் நீடித்தது. எனவே அதிமுகவை வழிநடத்தும் வலிமையான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். திமுகவுக்கு தான் பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்காக உள்ளது.

இந்தி திணிப்பு விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்க வேண்டும். இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்க கூடாது.

முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கும் போது பாவமாக உள்ளது. எந்த முதலமைச்சரும் இவ்வளவு மனம் வெதும்பி பேசியதாக வரலாறு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். நான் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார் சென்ற போது என்னை உடனடியாக விசாரித்து, என்னுடைய மாவட்ட செயலாளர் பதவிவை பறித்தார்.

அதுபோல முதலமைச்சர் ஸ்டாலின் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் இப்படி பேசியது திடமான தலைமைக்கு அழகல்ல. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 4 தொகுதிகளில் கூட வெல்வது சந்தேகமே.

திமுக தனித்து நிற்கப் போவதாக சொல்கிறார்கள். அது போல் ஏன் அதிமுகவவும் தனித்து நிற்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். எல்லா கட்சியும் தனித்து நிற்கட்டும். யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள அது வசதியாக இருக்கும். திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.