புதுடெல்லி: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்அனில் தேஷ்முக் ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் மகாராஷ்டிர அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஊழல் செய்ததாகவும் புகார் எழுந்தது.
அவர் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கைது செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் மீது சிபிஐயும் வழக்கு பதிவு செய்தது.
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் தேஷ்முக் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி ஜாமீன் வழங்கியது. எனினும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனில் தேஷ்முக் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.