மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முறை பெரும்போகச் செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம்(10) மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை, நீர்ப்பாசனத்திட்டங்கள், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டங்கள் மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகங்களின் மாநாட்டு மண்டபங்களில் குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பெரும்போக விவசாய செய்கைக்கான திகதி எதிர்வரும் 20 திகதி என தீர்மானிக்கப்பட்டது.
அந்தந்த விவசாய பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயற்காணி உழுதல், விதைப்பு தொடங்குதல், வேலி அடைத்தல், கால்நடைகளை அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீரமானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
இதேவேளை,வங்கி கடன்கள், கால்நடைப்பிரச்சினை, யானைப்பிரச்சனைகள், காடுகள் அழிப்பு, கடந்த சிறுபோகத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள், பெரும்போகத்தில் விவசாயிகள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரத்தின் விலையை நிர்ணயித்தல், சேதனப்பசளை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.