மீண்டும் மீண்டுமா… ஒரே கழிவறையில் 2 டாய்லெட்கள் – அதுவும் முதல்வர் திறந்துவைத்ததாம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் உரிய முறையில், பணிகள் மேற்கொள்ளாமல் அதற்கு மாறாக  மேற்கொள்ளப்பட்டு பல்வேறு  சர்ச்சைகளுக்கு உண்டாகி பேசும் பொருளாக மாறியது. குறிப்பாக, கை பம்பை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, கார், இரு சக்கர வாகனங்களை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, முறையற்ற குடிநீர் குழாய்கள் அமைத்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளை சமீப நாள்களாகவே  நடந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில்  சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு, ரூபாய் 1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக திட்ட அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது.

இந்த புதிய கட்டடத்தை  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 10) தலைமை செயலகத்தில் இருந்து  காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து,  இந்த அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வபெருந்தகையுடன்  சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து அலுவலர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த இந்த புதிய திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில், ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில், வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும், தற்போது இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பல்வேறு விமர்சனங்கள் எழும்பி வருகிறது.

இது குறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா தெரிவிக்கையில்,”தமிழக முதல்வர் திறந்து வைத்த இந்த அலுவலகத்தில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இரண்டு வெஸ்டர்ன் டாய்லெட் இடையில் தடுப்பு சுவர் ஏற்படுத்தி இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும்” என தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம் ஆர்த்தி தெரிவிக்கையில், “இதுகுறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. இவ்விவகாரம் தொடர்பான தகவல் எனக்கு இன்னும் வரவில்லை. தகவல்கள் பெற்றப்பின் அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.