சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (11-ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.