அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தங்களது ஒரே வாரிசான 2 வயதுடைய பேரனை அழைத்து வர 5 மாதங்களாக போராடி வரும் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை அடுத்துள்ள இ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர்கள் குருசாமி – ஈஸ்வரி தம்பதி. இவர்களது மகன் பிரவீன்குமார். அமெரிக்காவில் பணியாற்றி வந்தாகவும், அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு வயதுடைய மகனுடன் பிரவீன் குமார் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 2-ம் தேதி மகன் பிரவீன்குமார் மற்றும் மருமகள் தமிழ்ச்செல்வி இருவரும் அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் அடுத்த 10 தினங்களில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தங்களது இரண்டு வயது பேரனை இந்தியா அழைத்து வர உள்ள சிக்கல்களின் காரணமாக அழைத்து வர முடியவில்லை என்றும், உடல்களை பெற்றுக் கொண்டு காரியங்களை முடித்தப்பின் வந்து உரிய அனுமதி பெற்று பேரனை அழைத்து செல்லுமாறு அமெரிக்கா அரசு கூறியதாக தெரிகிறது.
அடுத்த 10 தினங்களில் அமெரிக்கா சென்றபோது தங்களது பேரனை வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துவிட்டதாகவும், இந்தியாவிற்கு அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்ததை அறிந்த குருசாமி – ஈஸ்வரி தம்பதி செய்வதரியாது திகைத்துள்ளனர்.
தங்களுக்காக இருந்த ஒரே மகன் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் அடுத்த வாரிசாக இருக்கக்கூடிய தங்களது பேரனையாவது தங்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என இந்திய அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் ஈஸ்வரி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து 5 மாதங்களாக மகன் மற்றும் மருமகளை நினைத்து ஏங்குவதை விட பேரனை அழைத்து வர முடியவில்லையே என்ற வேதனை அதிகமாக உள்ளதாகவும், தங்களுக்கு பின் தங்களின் ஒரே வாரிசாக உள்ள பேரனை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயதான தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
