அரசு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்; தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

தூத்துக்குடி: திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் தூத்துக்குடி வந்த கனிமொழி எம்.பி.க்கு தூத்துக்குடியில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா என்பது பல மாநிலங்கள், வாழ்க்கை முறை மற்றும் பல மொழிகளை கொண்டது. இப்படிப்பட்ட சூழலில் ஒன்றிய அரசானது அரசு அலுவல் மொழியாக ஒரு மொழியை மட்டும் திணிக்க கூடாது.

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும், எப்படி திறம்பட நடத்த வேண்டும் என்பதற்கு முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியை உதாரணமாக எடுத்து சொல்லும் அளவிற்கு மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய அளவிற்கு அவரது ஆட்சி இருந்து வருகிறது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துபோய் சிலர் ஏதேதோ சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இந்தி மொழி தொடர்பான பிரச்னையை மீண்டும் மீண்டும் கொண்டு வருவது ஒன்றிய அரசு தான். இதற்கு மு.க.ஸ்டாலின் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

8 ஆண்டுகளில் பெட்ரோல், காஸ் விலை பலமடங்கு உயர்ந்து விட்டது. லாபத்தில் இயங்கிய பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வேலை வாய்ப்புகளையும் பறித்து விட்டனர். இவர்கள்தான் திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். சாதனைகளை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது என்பதை உணர்ந்த பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மதம், மொழி பிரச்னைகளை கிளப்பி ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.