இடைத்தேர்தல் சின்னம் ஷிண்டே கட்சிக்கு வாள் – கேடயம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

மும்பை: ஷிண்டே அணியின் ‘பாலாசாகேப் சிவசேனா’ கட்சிக்கு வாள் – கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஷிண்டே அணி, உத்தவ் அணி என இரண்டாக பிளவு பட்டுள்ளது. கட்சி சின்னம், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் போன்ற பிரச்னைகளில் இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 3ம் தேதி அந்தேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு ஷிண்டே கடிதம் அனுப்பினார். இதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை இரவு முடக்கியது.

சிவசேனா பெயரை பயன்படுத்தவும் தடை விதித்தது. இதையடுத்து, இரு தரப்பும் புதிய சின்னம், கட்சி பெயர்களை ஒதுக்கீடு செய்ய தனித்தனியாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தன. உத்தவ் தாக்கரேயின் அணிக்கு கட்சி பெயராக, ‘சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)’ என்ற பெயரையும்,  தீப்பந்தம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதுபோல், ஷிண்டே அணி சிவசேனா சார்பில் திரிசூலம், கதாயுதம், உதயசூரியன் ஆகிய சின்னங்களை கோரியது. இவற்றை வழங்க மறுத்த தேர்தல் ஆணையம், புதிய சின்னங்கள் பட்டியலை நேற்று காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. சூரியன், வாள் கேடயம், அரசமரம் சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு ஷிண்டே அணி நேற்று கேட்டது. இதில், வாள் – கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.