ஆமதாபாத்,
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த டிரையத்லான்( நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் ஆகிய 3 பந்தயங்கள் அடங்கிய போட்டி) கலப்பு தொடர் பிரிவில் ஆகாஷ் பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக அணி 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. குஜராத் வெள்ளிப்பதக்கமும், மணிப்பூர் வெண்கலப்பதக்கமும் பெற்றது.
அறிமுக போட்டியான யோகாசனத்தில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவில் நிவேதி ,கீத்திகா, வைஷ்ணவி, ரோகிணி, காயத்ரி ஆகியோரை கொண்ட தமிழக அணி 125.36 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.
பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் அணி 56 தங்கம் உள்பட 121 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என்று மொத்தம் 73 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டி இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது. நிறைவு விழா சூரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.