கேரளாவில் கொடூரத்திலும் கொடூரம்: பெண்களை கொன்று நரமாமிசம் உண்ட கோரம்.. திடுக்கிடும் தகவல்!

நாட்டிலேயே மிகவும் அறிவார்ந்த, நல்லிணக்கத்துக்கு சான்றாக இருக்கும் மாநிலமாக கேரளா கருதப்படுகிறது. இதுபோக கல்வியில் முதலிடத்தை பெற்றிருக்கும் கேரளாவில் அண்மைக்காலமாக நடக்கும் பல கொடூர சம்பவங்கள் சலசலப்பையும் பரபரப்பையும் கிளப்பி வருகிறது.
இப்படி இருக்கையில் அண்மையில் கசிந்த விவகாரம்தான் தற்போது நாட்டையே உலுக்கி வருகிறது. அதாவது, பணத்தாசையால் போலி மந்திரவாதியை நம்பி இரண்டு அப்பாவி பெண்களை நரபலி கொடுத்த தம்பதியர் கைதாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியராக அறியப்படும் பகவல் சிங்கிடமும் அவரது மனைவி லைலாவிடமும் சகல ஐஸ்வர்யங்களும், செல்வமும் பெருக பூஜை செய்வதாகச் சொல்லி போலி மந்திரவாதியான முகமது ஷாஃபி என்ற ஷிகாப் நரபலியில் ஈடுபட வைத்திருக்கிறார்.
image
எர்ணாகுளத்தின் பெரும்பாவூரைச் சேர்ந்த ஷிகாப், போலியாக பேஸ்புக் கணக்கை தொடங்கி பகவல் சிங்கை தொடர்புகொண்டு பணத்தாசை காட்டியிருக்கிறார். அதோடு, அவ்வாறு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால் சிறப்பு பூஜை செய்ய வேண்டுமென கூறியிருக்கிறார். இதனை நம்பி பகவல் சிங்கும் லைலாவும் சம்மதித்திருக்கிறார்கள்.
அப்படி நரபலி கொடுப்பதற்காக கடந்த மார்ச் மாதத்தன்று எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரோஸ்லின் என்ற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் காசு கொடுப்பதாக ஆசைக்காட்டி பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஷிகாப். அங்கு ரோஸ்லினை படுக்க வைத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து சில பூஜைகளை செய்திருக்கிறார்.
ஆனால் அந்த பூஜை கைகூடாததால் கடந்த செப்டம்பர் அன்று அதே பாணியில் தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை அழைத்து வந்து நரபலி கொடுத்திருக்கிறார்கள். ரோஸ்லின் காணாமல் போன போது அவரது மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் பெரியளவில் துப்பு கிடைக்காததால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
image
ஆனால் பத்மா காணாமல் போனது குறித்து அவரது மகன் செல்வராஜ் செப்டம்பர் 27ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் பத்மாவின் செல்ஃபோன் சிக்னலை ஆராய்ந்த போது அது கடைசியாக திருவல்லாவில் பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த CCTV காட்சியை கொண்டு விசாரித்ததில் பகவல் சிங், லைலா மற்றும் ஷிகாப்பின் நரபலி கூத்து தெரிய வந்திருக்கிறது.
பின்னர் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்ட ரோஸ்லின், பத்மாவின் உடல்கள் தேடி எடுக்கப்பட்டன. ஆனால் உடல்கள் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் டி.என்.ஏ. பரிசோதனையின் மூலமே யார் என்பது அடையாளம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நரபலி கொடூரத்தில் ஈடுபட்ட போலி மந்திரவாதி ஷிகாப், தம்பதியர் பகவல் சிங், லைலா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறார்.
image
அங்கு அவர்களை மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலீசாரையே அருவருக்கத்தக்க மனநிலையில் ஆழ்த்தியிருக்கிறது கைதானவர்களின் வாக்குமூலம்.
அதாவது செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக நரபலி கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் அந்த இரண்டு பெண்களின் உடல்களையும் 56 துண்டுகளாக வெட்டி 4 குழிகளை தோண்டி புதைத்து அங்கு மஞ்சள் செடியை நட்டு வைத்திருக்கிறார்கள்.
இதுபோக, நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களில், இரண்டாவதாக புதைக்கப்பட்ட பத்மாவின் உடலை புதைப்பதற்கு முன் கைதான மூவரும் சமைத்து உண்டதாக கொடூரத்திலும் கொடூரமான அதிர்ச்சி நிகழ்வு குறித்து மூவரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதாவது ஐஸ்வர்யத்திற்காக செய்யப்பட்ட பூஜைக்காக, நரபலி கொடுத்த பின்பும் இன்னும் பூஜை இன்னும் திருப்திகரமான கட்டத்தை அடையவில்லை என்பதற்காக ஷாஃபியின் அறிவுரைப்படி இரண்டாவதாக நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை துண்டாக்கி சமைத்து உண்டதாகவும் கூறி அதிரவைத்திருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.