திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை 56 துண்டுகளாக வெட்டி, வீடு முழுவதும் ரத்தத்தை தெளித்து விடிய விடிய பூஜை செய்து நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக விசாரணையில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். கொச்சியில் லாட்டரி வியாபாரம் செய்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா (51), எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருந்து விற்பனை செய்து வந்த ரோஸ்லி (50) ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மந்திரவாதி முகமது ஷாபி, நாட்டு வைத்தியர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மந்திரவாதி முகமது ஷாபி, ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி பகவல் சிங்குடன் பழகி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஷாபி, தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் அவர் பூஜை செய்தால் செல்வம் சேரும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார். மறுநாள் பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்ற முகமது ஷாபி, தன்னை மந்திரவாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் சேரும் என்று கூறியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் வாங்கிய அவர், முதலில் காலடியைச் சேர்ந்த ரோஸ்லியையும், பிறகு தர்மபுரியை சேர்ந்த பத்மாவையும் பண ஆசை காட்டி பகவல் சிங்கின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடூரமாக கொன்று ரத்தத்தால் பூஜை செய்துள்ளனர்.
பின்னர் உடலை வெட்டி துண்டு துண்டாக்கி, உப்பை தூவி பகவல் சிங்கின் வீட்டின் பின்புறம் 4 இடங்களில் புதைத்துள்ளனர். போலீசார் முன்னிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் 56 துண்டுகளாகவும், இன்னொருவது உடல் 5 துண்டுகளாகவும் வெட்டப்பட்டிருந்தது. உடல் பாகங்கள் டிஎன்ஏ சோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட ஆயுள் கிடைக்க, நரபலி கொடுக்கப்பட்ட மனித மாமிசத்தை பச்சையாக சாப்பிட வேண்டும் என்று பகவல் சிங்கிடமும், லைலாவிடமும் ஷாபி கூறியுள்ளார். ஆனால் மனித மாமிசத்தை பச்சையாக சாப்பிட மனம் வராததால் 2 பேரும் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கணவன் முன் மனைவி பலாத்காரம்
* முகமது ஷாபி ஏற்கனவே 75 வயது மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவத்தில் கைதாகி ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்து கடந்தாண்டுதான் ஜாமீனில் வந்துள்ளார்.
* பூஜையின் ஒரு பாகம் என்று கூறி பகவல் சிங்கின் முன்னிலையிலேயே அவரது மனைவி லைலாவை ஷாபி பலாத்காரம் செய்து உள்ளார்.
* கைதான முகமது ஷாபி, பகவல் மற்றும் லைலாவை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
* நரபலி சம்பவம் தொடர்பாக கேரள மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து கேரள டிஜிபி அனில்காந்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
* உயிர் தப்பிய பெண்
கொச்சியை சேர்ந்த லாட்டரி விற்கும் ஒரு இளம்பெண் கூறுகையில், ‘முகமது ஷாபியையும், கொல்லப்பட்ட பத்மா மற்றும் ரோஸ்லி ஆகியோரையும் எனக்கு தெரியும். திருவல்லாவிலுள்ள ஒரு தம்பதிக்கு பூஜை நடத்த வேண்டும் என்றும், அதில் கலந்து கொண்டால் தனக்கு ஒன்றரை லட்சம் பணம் கிடைக்கும் என்றும், அதில் 50 ஆயிரம் எனக்குத் தருவதாகவும் அவர் என்னிடம் பலமுறை கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். என்னையும் நரபலி கொடுப்பதற்காகத் தான் அவர் அழைத்துள்ளார் என்று இப்போதுதான் எனக்கு புரிந்தது. மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளேன்’ என்று கூறினார்.